காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுத் தரமுடியாது: தமிழ்நாடு திட்டவட்டம்

காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுத் தரமுடியாது: தமிழ்நாடு திட்டவட்டம்

2 mins read
5e36b20a-bc65-4471-884b-be777d21e26c
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய் காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் இல்லை என்று கூறினார். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: காவிரி நீர், மேகதாது அணை விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை அரசு எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காது என்று முதலமைச்சர் விஜய், நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் ஆகியோர் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) உறுதியளித்துள்ளனர்.

இதில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளப்படமாட்டாது என்று அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், காவிரி விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதால் இதில் அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எவ்வித நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அண்டை மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேவைப்பட்டால் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளவும் தயார் என்று விஜய் குறிப்பிட்டார்.

கர்நாடக அரசு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி உரிய நீரைத் திறந்துவிடாமல் தொடர்ந்து தாமதித்து வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் குற்றஞ்சாட்டினார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள மொத்த நீரையும் கர்நாடகம் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பொறுப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், கர்நாடக அணைகளிலிருந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் அணை திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவதில் பயனில்லை. திமுக, அதிமுக கட்சிகள் ஏற்கெனவே ஒரு நிலைப்பாட்டை எடுத்தபின்னரே இத்தகைய கோரிக்கையை விடுக்கின்றன என்று நிர்மல்குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்