தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர் வேட்பாளர் விஜய்: தவெக செயற்குழுவில் முடிவு

2 mins read
e561c4a2-f856-4b81-82fe-0ed46576d6f4
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்குவது என்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னைக்கு அருகேயுள்ள பனையூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அதற்கு முன்பாக கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், மலி​வான அரசி​யல் ஆதா​யங்​களுக்​காக மக்​களை மதரீ​தி​யாகப் பிளவுப்​படுத்​தி, வேற்​றுமையை விதைத்து அதில் பாஜக குளிர் காய நினைப்பதாகச் சாடினார்.

தமிழகத்தில் பெரி​யார், அண்​ணாவை அவம​தித்​தோ, தமிழகத்​தின் தலை​வர்​களை வைத்தோ அரசி​யல் செய்ய நினைத்​தால் அதில் பாஜக ஒரு​போதும் வெற்றி பெற முடி​யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சுயநல அரசி​யல் லாபங்​களுக்​காக பாஜக​வுடன் கூடி குலைந்து கூட்​ட​ணிக்கு போக, தமிழக வெற்​றிக் கழகம் ஒன்​றும் திமுகவோ, அதி​முகவோ இல்​லை. கூட்​டணி என்​றாலும், தமிழக வெற்​றிக் கழகம் தலை​மை​யில்​தான் அமை​யும். அது திமுக, பாஜக​வுக்கு எதி​ராகத்​தான் இருக்​கும். அதில் சமரசம் என்ற பேச்​சுக்கே இடமில்​லை,” என்றார் விஜய்.

இதற்கிடையே, ஜூலை இரண்டாவது வாரம் முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

மேலும், மத்திய பாஜக அரசின் இந்தி, சமசுகிருத மொழித் திணிப்பை ஏற்க முடியாது என்றும் அக்கட்சித் தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற இரு தீர்மானங்கள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.

“கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்திய அரசு கேட்டுப் பெற வேண்டும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்த வேண்டும்,” என தவெக செயற்குழு வலியுறுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளில் தவெக இணையுமா அல்லது தனித்து நிற்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார்.

அதை உறுதி செய்யும் வகையில், தவெக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்று உலா வந்த ஆருடத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.

குறிப்புச் சொற்கள்