சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள குதிரைப்பேர வழக்கில், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் அதிமுக நிர்வாகியுமான பி.எம். மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசைக் கவிழ்க்கவும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசவும் சதி நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அதிமுகவினர், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாகப் பகிரங்கப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்ட இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அதிகாலை மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மன்னனின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம், தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசச் சொன்னது யார், அதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்து கேள்விகளை எழுப்பிய பின்னர் அவர் கைதானார்.
இந்த வழக்கில் மேலும் சில முக்கியப் புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
