தென்காசி: தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது 2,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த படிக்கட்டு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தென்காசி மாவட்டம் மலையப்பட்டி பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அங்கு படிக்கட்டுகளைக் கொண்ட, செங்கல் கட்டுமானக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள செங்கற்கள் 40 செமீ நீளமும் 20 செமீ அகலமும் கொண்டதாக அளவில் பெரியதாக உள்ளன என்றும் கிணற்றின் உட்பகுதியில் நீர்மட்டம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கிணறு பண்டைய கால மக்களுக்கு கோடைக் காலங்களில் முக்கியமான நீராதாரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் ஆய்வு நீடிக்கும்போது கிணற்றின் முழு ஆழம் எவ்வளவு என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கீழடி, காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற பகுதிகளில் கிடைக்கக்கூடிய செங்கல் அமைப்புகளைப் போன்றே இந்தக் கிணற்றின் கட்டுமானமும் உள்ளது.
தமிழகத்தில் வேறு எந்த அகழாய்விலும் கண்டறியாத வகையில் முதல்முறையாக படிக்கட்டு அமைப்புடன் இந்தக் கிணறு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கிணற்றின் படிக்கட்டுகள் கற்களாலும் கிணற்றுச் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. படிக்கட்டில் உள்ள தேய்மானம் நீண்ட காலமாக மக்கள் இந்தக் கிணற்றைப் பயன்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது.
மலையடிப்பட்டி அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், வரையப்பட்ட மூன்று பானைகள் உள்ளிட்டவைக் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், கண்ணாடி மணிகள், சுடுமண் சிற்பங்கள், விளையாட்டுக்கற்கள், கற்கருவிகள், இரும்புப் பொருள்கள், இரும்பு உருக்கின் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் நுண்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம், வரலாற்றுக் காலம் ஆகிய அனைத்து பண்பாட்டுக் காலங்களிலும் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

