சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கடந்த 1996-2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தார்.
அப்போது, அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவானது.
வழக்கை விசாரித்த வேலூர் குற்றவியல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலையாவதை துரைமுருகன் தவிர்த்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 23) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

