சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில் தற்போது திமுக போட்டியிடும் 164 தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிட்டார்.
ஓபிஎஸ்சுக்கு போடி தொகுதி
ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
திமுகவில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி நாயக்கனூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் முதல் முறையாக திமுக வேட்பாளராக போட்டியிட இருக்கின்றார்.
அத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.டி.நாராயணசாமியை இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதேபோல், வைத்திலிங்கத்துக்கு ஒரத்தநாட்டிலும், மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளத்திலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பட்டியலில் இடம் இல்லை.
இரு அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை
கடந்த முறை சரியாக செயல்படாத எம்எல்ஏக்களுக்கு திமுகவில் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு வாய்ப்பில்லை. அத்தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தாராபுரம் தொகுதி கயல்விழி செல்வராஜுக்கும், ராணிப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும் அமைச்சருமான ஆர்.காந்திக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேவேளை அவரது மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
எழும்பூர் எம்எல்ஏவான பரந்தாமனுக்குப் பதில், தமிழன் பிரசன்னாவுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
தவெக தலைவர் விஜய் போட்டியிட இருப்பதாகச் சொல்லப்படும் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பாக ஆர்.டிசேகர் போட்டியிடுகின்றார். எனினும் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
60க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 175 தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 59 தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். இதில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.
அறுபதுக்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. சென்னையில் இருக்கும் 16 தொகுதியில் திமுகவினர் 15 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

