சென்னையைக் குறிவைக்கும் திமுக: தயங்கும் அதிமுகவினர்

சென்னையைக் குறிவைக்கும் திமுக: தயங்கும் அதிமுகவினர்

2 mins read
726059f8-c025-484a-b9e1-14c777c2ad31
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சென்னையில் குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றன. - கோப்புப்படம்: ஈடிவி பாரத்

சென்னை: தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடுகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், யாருக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குவது என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக திமுகவின் கோட்டையாக விளங்குகிறது. கடந்த 2011ல் மட்டுமே திமுகவுக்குச் சென்னையில் பின்னடைவு ஏற்பட்டது.

மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுகவின் நம்பிக்கைக்குரிய வாக்காளர்களாக சென்னைவாசிகள் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி, சொந்தத் தொகுதியான திருவாரூரைக்கூட விட்டுவிட்டு சென்னையில் களம்கண்டார். தற்போது அவரது பேரன் உதயநிதியும் சென்னையை நம்புகிறார்.

புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய் சென்னையில் தவெகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சென்னையில் குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றன.

வேளச்சேரி, தி.நகர், வடசென்னையில் ஒரு தொகுதி என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வடசென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியை விசிகவும் தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளன.

திமுக அணியில் உள்ள கட்சிகள் சென்னையில் களமிறங்க விரும்பும் நிலையில், அதிமுக அணியிலோ, நிலைமைத் தலைகீழாக உள்ளதாக தமிழக ஊடகச்செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

தி.நகர், வேளச்சேரி தொகுதிகளைக் கேட்கும் பாஜக, மற்ற தொகுதி என்றால் பின்வாங்குகிறது. மற்ற கட்சிகளோ சென்னையில் உள்ள தொகுதிகள் வேண்டவே வேண்டாம் என ஒதுங்கிவிட்டதாக இந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கூட்டணிக் கட்சிகளை நம்பாமல் சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் களமிறங்க அதிமுக தயாராகி வருவதாகவும் தனிப்பட்ட வகையில் பிரசார பலம் கொண்ட, அரசியல் அனுபவம் உள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுக தலைமை கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்