சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை புதிய திருப்பங்களை எட்டியுள்ளது.
108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கப் போராடி வரும் சூழலில், அரசியல் களத்தில் பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளிவந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
47 இடங்களை வைத்துள்ள அதிமுக ஆட்சியமைக்க முன்வந்தால், 59 இடங்களைக் கொண்டுள்ள திமுக அதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. திராவிடக் கட்சிகளின் இந்தத் திடீர் நெருக்கம் பாஜக தலைமையைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
எனினும், இந்தத் தகவல்களை இரு கட்சிகளின் மூத்த தலைமைகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி, இத்தகைய செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
“இது மக்களின் தீர்ப்பு. ஜனநாயகத்தில் அதுவே மிக முக்கியமான விஷயம். திமுக-அதிமுக கூட்டணி குறித்த பேச்சுகள் வெறும் ஊகங்களே. ஊகங்களுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது,” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
“அரசியல் களத்தில் திமுகவும் அதிமுகவும் பிரதான எதிரிகள். எனவே, இவர்களுக்கிடையே கூட்டணி என்பது சாத்தியமற்றது,” என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் மே 10ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ள நிலையில், அதுவரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன்பிறகு தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கப்போவதாக திமுக தெரிவித்துள்ளது.
தற்போது திமுக (59), அதிமுக (47) இணைந்தாலும் மொத்தம் 106 இடங்களே வரும் என்பதால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்திகளாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் அமைந்துள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

