தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின், ஈபிஎஸ் கடும் மோதல்

2 mins read
31507300-76eb-4b54-b8f3-5463ad5ebd5c
தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயன்று வருவதால் அக்கட்சிக்கு ஆதரவாகப் பழனிசாமி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயன்று வருவதால் அக்கட்சிக்கு ஆதரவாகப் பழனிசாமி பேசுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்களும் பழனிசாமியும் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாகத் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவைக் காவலர்களை அழைத்து அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு.

அதற்கு முன்பாகவே, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், பேரவை வளாகத்துக்கு அருகே நின்று, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே, பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதியம் 12 மணிக்கு விஜய் கரூர் வருவதாக தவெக அறிவித்திருந்த நிலையில், அவர் இரவு 7 மணிக்குத்தான் வந்தார் என்றார்.

“ஆனால், மக்கள் காலை முதல் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்குப் போதிய குடிநீர், உணவு என எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

“அதே இடத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டனர்.

“வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைவிட கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் கூடுதலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

“கூட்ட நெரிசலில் சிக்கிய பலரையும் தமிழக அரசுதான் காப்பாற்றியது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்தபோது அங்கிருந்த தவெகவினர் கூட்டத்துக்கு இடையூறு செய்ய வந்ததாகக் கூறி ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தாக்கினர்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தனது 50 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கட்டுப்பாடுகளை மீறும்போது கட்சித் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதை மனதிற்கொண்டு தவெக தலைமைப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகளில் ஒருவரான நிர்மல் குமாருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்