கணிப்புகளும் திணிப்புகளும்

கணிப்புகளும் திணிப்புகளும்

2 mins read
26dcdbb2-b68a-4d40-bb18-fb910fc92dde
கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிய 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். - படம்: விக்கிபீடியா

டாக்டர் ராமதாஸ் இல்லாத பாமக தலைமை; அண்ணாமலை இல்லாத பாஜக தலைமை; ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்ற முன்னணித் தலைவர்கள் இல்லாத அதிமுக தலைமை - இதுதான் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தலைமையில் மட்டுமே மாற்றம். தேமுதிகவின் பிரேமலதா தலைமை கூடுதலாகக் கிடைத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. தேர்தல் நேர கருத்துக்கணிப்புகள் அப்படியே பலித்துவிடும் என்று சொல்வதற்கில்லை. கணிப்புகள் பொய்யாகிப்போன சம்பவங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு 2011 சட்டமன்றத் தேர்தல். கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்புகள் வெளியிடப்படுவதும் உண்டு. குறிப்பாக, அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் ஆதரவாளர்களின் கைகளில் உள்ள ஊடகங்களின் கணிப்புகள் வாக்காளர்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டவையாக இருந்ததும் உண்டு.

இந்தத் தேர்தலுக்கு வெளியிடப்பட்டுள்ள கணிப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தலைவர்கள் இல்லாததால் கூட்டணியின் வாக்கு வங்கியில் சில இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. அரசுக்கு எதிரான மனநிலையால் ஏற்படும் இழப்பும் இந்த இழப்பும் சரியாகிவிடும்.

கூடும் கூட்டங்கள் வாக்குகளாக மாறாது என்ற கணக்கு இந்தத் தேர்தலில் பொய்த்துப்போகவும் வாய்ப்புண்டு. விஜய்க்கு இளையர்கள் மத்தியில் காணப்படும் எழுச்சி வாக்குகளாக மாறினாலும் வியப்பில்லை. முதல் தேர்தல் என்பதால் தவெகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கக்கூடும். பத்தாண்டுகளாக ‘நாம் தமிழர் கட்சி’யை ஆதரித்த இளைய வாக்காளர்களில் சிலர் தவெக பக்கம் சாயும் வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா இருக்கும்வரை அதிமுகவுக்குப் பெரிய வாக்கு வங்கியாக இருந்த பெண்களை ஸ்டாலின் அரசு திட்டங்கள் கவர்ந்துள்ளதால் திமுகமீது பெண்கள் காட்டும் ஆதரவைத் தக்கவைக்க அந்தத் திட்டங்கள் உதவுகின்றன. இதன் விளைவாக, தவெகவின் தாக்கம் திமுகவைவிட அதிமுகவின் வாக்கு வங்கியில் அதிகமாக உணரப்படலாம்.

அதிமுக கூட்டணியுடன் ஒப்பிடுகையில் திமுக கூட்டணி பல கட்சிகளுடன் ஒப்பீட்டளவில் வலிமையான நிலையில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் 2021 தேர்தலில் சரிந்த திமுக, இப்போது ஓரளவிற்குச் சிறப்பாகச் செயல்படக்கூடும். அந்த நோக்கத்தில்தான் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார். டெல்டா வட்டாரத்திலும் அக்கட்சி தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக முயன்று வருகிறது.

அதிமுகவிற்குள் சில உட்கட்சிப் பூசல்களும் தலைமை மீதான அதிருப்தியும் நீருபூத்த நெருப்பாக உள்ளன. பாஜகவுக்குக் கட்டுப்படும் கட்சியாக அதிமுக மாறிவிட்டதாக முன்னணி நிர்வாகிகள் சந்தேகிப்பதே அதற்குக் காரணம்.

ஆனாலும், பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என மக்கள் சிந்திக்கவும் இடமுண்டு. திமுக அரசுமீதான அதிருப்தி, கூட்டணிக்குள் ஒற்றுமையில்லாதது, கூட்டணி ஒதுக்கீட்டில் மனக்கசப்பு, கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் ஆகியோரின் நழுவல் போன்றவை அதற்குக் காரணங்களாக அமையலாம்.

இவைதான் தொகுக்கப்பட்ட கணிப்புகள். இப்போது நிலவும் இந்தச் சூழலின் அடிப்படையில் ஊடகங்களும் அமைப்புகளும் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் எந்தளவுக்கு உண்மை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும். -திருநா

குறிப்புச் சொற்கள்