தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவசம்: அத்தியாவசியம்... அநாவசியம்....

4 mins read
74ec2877-ec0c-42c1-b283-21fdf77800a8
டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என பாஜக அறிவித்து, தற்போது அதை நிறைவேற்றி வருகிறது. - படம்: ஊடகம்
multi-img1 of 4

சதீஷ் பார்த்திபன்

“இலவசத் திட்டங்கள் வரி செலுத்துபவர்களுக்கு வலியைத் தருகின்றன. தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர இலவசத் திட்டங்கள் அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

“இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத்திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும்”.

- இப்படி அழுத்தந்திருத்தமாகச் சொன்னார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால், ‘அது மாமூல் அரசியலுக்கு ஒத்துவராது’ என மோடியின் கட்சியான பாஜகவே நிரூபித்துவிட்டது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடந்த தேர்தலில், குறிப்பாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என பாஜக அறிவித்து, ஆட்சியைப் பிடித்து, சொன்னபடி ரூ.2,500 ரொக்க இலவசத்தை வழங்கி வருகிறது.

பொதுவாக, இலவசத் திட்டங்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளன என்பதே யதார்த்த நிலையாக உள்ளது.

தமிழகத்தில் இலவசத்திட்டம், சலுகைத்திட்டம் என்பது சுமார் 58 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.

‘மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என 1967 சட்டமன்றத் தேர்தலின்போது அறிஞர் அண்ணா வாக்குறுதி கொடுத்தார். ஏழை மக்களுக்கு அரிசிச் சோறு சரிவர கிடைக்காத காலகட்டமாக அது இருந்தது.

அதனால்தான், ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தர வேண்டும் என்பது எங்களின் லட்சியம். ஒருவேளை அது முடியாமல் போனாலும், ஒரு படி அரிசியை நிச்சயம் தருவோம்’ எனத் தேர்தல் அறிக்கையில் அண்ணா தெரிவித்தார்.

அப்படிச் சொல்லி ஆட்சியைப் பிடித்தார் அண்ணா. ஆனால், லட்சியத்தை நிறைவேற்றுவதில் தடங்கல். அதனால் நிச்சயத்தை... அதாவது... படி அரிசி திட்டத்தை சாத்தியப்படுத்தினார்.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் அரசு தரும் இலவசங்கள் எப்போதுமே வரவேற்கத் தகுந்த ஒன்றாகவே இருக்கின்றன.

காமராஜர் அரசின் மதிய உணவுத் திட்டம், பள்ளிச்சீருடை, எம்ஜிஆர் அரசின் சத்துணவுத் திட்டம், காலணி, பல்பொடி, கலைஞர் அரசின் மதிய உணவுத்திட்டத்தில் முட்டை, பேருந்து அட்டை, ஜெயலலிதா அரசின் மடிக்கணினித் திட்டம், மிதிவண்டி, சீருடைத் திட்டம், ஸ்டாலின் அரசின் மாணவர் உதவித்திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவை போற்றத் தகுந்தவையே என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

ஏனென்றால், கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதைச் செய்து தரவேண்டியது அரசின் கடமை.

மறுபக்கம் சில திட்டங்கள் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டதும் உண்டு.

திமுக அரசின் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி செயல்படுத்தப்பட்டபோது பலர் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி, அதை ஆந்திர வியாபாரிகளிடம் 500 ரூபாய்க்கு விற்ற அவலம் நடந்தது.

அதிமுக அரசு தந்த இலவச மிக்சி, கிரைண்டர், மேசை விசிறி போன்றவை தேவையற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.

ஒவ்வொரு அரசும் தரும் 20 கிலோ இலவச அரிசி, கிலோ ரூ.5க்கு வாங்கி, அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று, அங்கே நவீன அரிசி ஆலைகளில் பட்டை தீட்டப்பட்டு, கவர்ச்சியான பைகளில் கிலோ ரூ.50 என தமிழகத்திற்கே திரும்ப வரும் கொடுமை இன்றளவும் நடக்கத்தான் செய்கிறது.

இருப்பினும், ஏழை மக்களின் பசி போக்கும் திட்டம் என்பதால் தொடர்ந்து ரேசன் கடைகளில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச ஆடு வழங்கும் திட்டத்தை முன்வைத்தார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் திமுகவிற்காக பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, ‘அந்தம்மா பெண்களை ஆடு மாடு மேய்க்கச் சொல்றாங்க’ என விமர்சனம் செய்தார். இதனால் பெண்களின் கண்டனத்திற்கும் ஆளானார் வடிவேலு.

அந்தத் தேர்தலில் வென்ற ஜெயலலிதா, இலவச ஆடு திட்டத்தை அமல்படுத்தினார். அது இன்றளவு கிராமப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் உயர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.

இப்படி நலத்திட்டங்களும் இலவசத்தில் வருவதால் முற்றிலுமாக இலவசத் திட்டத்தை மறுக்க முடியவில்லை.

தற்போதைய ஸ்டாலின் அரசு மாணவர்களுக்குப் பண உதவி உட்பட பல்வேறு பாராட்டத்தக்க இலவசங்களை வழங்கி வருகிறது.

அதேசமயம் சில இலவசத் திட்டங்கள் தமிழக அரசைக் கடனில் தள்ளிக்கொண்டே இருக்கிறது.

அவை என்ன திட்டங்கள்?

1. கலைஞர் கனவு இல்லத் திட்டம் 2025-26க்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுகிறது.

2. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க, ரூ.13,807 கோடி ஒதுக்கப்படுகிறது.

3. மகளிர் விடியல் பயணம் எனும் இலவச பேருந்துப் பயணத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கப்படுகிறது.

- இப்படி பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

“பசித்தவனுக்கு மீன் கொடுத்து அவனை சோம்பேறியாக்காமல், அவனுக்கு மீன்பிடிக்க கற்றுத் தந்தால் அவன் முன்னேறுவான். அதைத்தான் செய்ய வேண்டும் அரசு,” என்பது பலரின் கருத்தாக உள்ளது.

இதை அரசுகள் உணர்ந்திருந்தாலும்கூட, ‘மக்களுக்கு இலவசம் தருதல்’ எனும் புலிவாலைப் பிடித்துவிட்டது. அதை விட்டுவிட்டால் புலி அடிக்குமோ..? என்பதால் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன அரசுகள்.

- சதீஷ் பார்த்திபன்

குறிப்புச் சொற்கள்