தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கத் தமிழகம் - மின்னுவதெல்லாம் பொன்னல்ல

5 mins read
a7487eea-502a-450b-9899-7e26e4a20831
தமிழர்களுக்கு ‘தங்கம்’ என்பதும் ஒரு வகையில் தொட்டில் பழக்கம்தான். - படம்: ஊடகம்
multi-img1 of 3

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். ஒரு மனிதனின் குழந்தைப் பருவ பழக்கம் அவன் மரணமடையும் வரை தொடருமாம்.

‘தங்கம்’ என்பதும் ஒரு வகையில் தொட்டில் பழக்கம்தான்.

குழந்தையைக் கொஞ்சும்போதே, ‘என் தங்கமே’, ‘தங்கக்கட்டி’ என்றுதான் தமிழகத் தாய்மார்கள் கொஞ்சுவார்கள். அப்போதிருந்தே உண்டாகிவிடுகிறது தங்க மோகம்.

‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ என்பார்கள். ஆனால் சங்க காலத்திலிருந்தே தமிழர்களிடம் தங்கப் பயன்பாடு சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கத்தினால் ஆன பட்டம் கிடைத்துள்ளது. பட்டம் என்பது திருமண நாளில் மணமக்களுக்கு அவரவர் தாய்மாமன்களால் நெற்றியில் நூல்கோர்த்து கட்டப்படும் தங்கத்தகடு ஆகும். இந்தப் பட்டம் பலப்பல அலங்கார வேலைப்பாடுகளுடன் அகழாய்வில் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுகளில் குண்டுமணி உள்ளிட்ட தங்கத்தால் செய்யப்பட்ட காதணிகள், தங்கக்காசு போன்றவை கிடைத்துள்ளன.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மளிகைமேடு பகுதியில் கையில் அணியும் தங்கக்காப்பு கிடைத்துள்ளது.

ஆக, தங்கப் பயன்பாட்டில் தமிழர்கள் உலகின் முன்னோடிகள் சிலரில் ஒருவராக இருந்திருக்கிறார்கள்.

எனவேதான் தங்க மோகம் என்பது தமிழர்களின் மரபணுக்களிலேயே உள்ளது போலும்.

‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ’ எனும் திரைப்பாடல் ஒன்று உண்டு.

அது பாட்டுக்குச் சரி!

நிஜ வாழ்க்கைக்குப் பொருந்துமா?

அதனால்தான் தமிழக மக்கள் வாங்கிக்குவிக்கும் தங்கம் சுத்தமானதா என்பதை அறிந்துகொள்ள தங்க நகை மதிப்பீட்டாளர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.

‘மின்னுவதெல்லாம் பொன்’ என நம்பி மோசம் போய்விடக்கூடாது என்பதால் அரசாங்கம் இந்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ளது எனலாம்.

தமிழக அரசு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை சென்னையில் நடத்துகிறது. இதில் தங்கம், வெள்ளியின் தரம் அறிதல், விலை நிர்ணயம், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டுமுறை ஆகியவை கற்றுத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகளை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

தங்கமான வேலை வாய்ப்புக்குப் பயிற்சி

இந்நிலையில், தங்க நகைக் கடைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்கத்துறை இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் இளையர்களுக்கு வேலைவாய்ப்பு அமையும்.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களின் தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முறை ஆகியவை குறித்து தெரிந்துகொள்ள இயலும்.

மேலும், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, ரத்தினங்கள் மதிப்பீட்டு முறை, ‘ஹால் மார்க்’ தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் ஆகியவற்றுடன் மிக முக்கியமாக போலி நகைகளை அடையாளம் காணுதல், அதற்கான வழிமுறைகள் ஆகியனவும் கற்றுத்தரப்படும்.

நெருங்கும் அட்சய திரிதியை நாள்

இன்னும் மூன்று வாரங்களில், நகைகளை வாங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் ‘அட்சய திரிதியை’ வரப்போகிறது.

அன்றைய தினம் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கும். அதற்கு முன்னதாகவே தமிழக அரசின் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தங்க வியாபாரம் என்பது பெரிய தொழில். அதிலும், சென்னை மாநகரை தென்னிந்தியாவின் தங்க விற்பனைச் சந்தையின் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு அதிக அளவில் தங்கம் விற்பனையாகிறது. சென்னையில் உள்ள தியாகராயர் நகரில் (தி.நகர்) தான் 80% தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகியவை உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள்.

உலகின் மொத்த தங்க இருப்பில் 11% இந்தியா வசமுள்ளது. தமிழகம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் தங்க நகைக் கடைகள் உள்ளன. 50,000 பொற்கொல்லா் குடும்பங்கள் நகைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்கள் விமானம் மூலம் சென்னை வந்திறங்குகிறார்கள்.

அண்மையில் இந்திய அரசு, சுங்கவரி விதிப்பதில் கொண்டுவந்த மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தங்கம் கிடைக்குமா?

தமிழ்நாட்டில் சில இடங்களில் தங்கமும் லித்தியமும் இருப்பதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்திருந்தது.

ஒருவேளை தமிழகத்திலேயே தங்கம் கிடைக்கும் எனில், அதன் விலை குறையக்கூடும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி கிளப்பிவிட்டனர். இத்தகவல் உண்மைதானா?

இதுகுறித்து ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் எஸ்பி விஜயகுமார் கூறிய தகவல்களை பிபிசி தமிழ் ஊடகம் ஒரு கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024 பிப்ரவரியில், நிலவியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பூமிக்கு கிழே தங்கம் இருப்பது தெரியவந்தது.

அங்கு எளிதாகப் பிரித்து எடுக்கக்கூடிய வகையிலான தங்கம், பிற உலோகங்களுடன் கலந்தது என இரு வகைகளில் தங்கம் கிடைக்கிறது.

இந்த தங்கத்தாதுக்கள், பெரும்பாலும் இரும்புக்கல் எனப்படும் Banded Magnetite Quartzite (BMQ) பாறைகளிலேயே கிடைக்கின்றன. சில இடங்களில் வேறு உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கின்றன.

“பொதுவாக தங்கச் சுரங்கங்கள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், தோண்டி எடுக்கப்படும் தாதுக்களில் 500 ppb (parts per billion) அளவுக்கு தங்கம் இருக்க வேண்டும்.

“அந்த அளவுக்கு தங்கத் தாதுக்கள், அதாவது 554ppb - 24,293ppb தரமுள்ள தங்கத்தாதுக்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

“இங்கு ஒட்டுமொத்தமாக 3.2 டன் அளவுக்குத் தங்கம் கிடைக்கலாம். ஆனால், இதை உறுதிசெய்ய மேலும் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும்,” என்று திரு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சில பகுதிகளில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை எடுப்பது பொருளியல் ரீதியில் பலனளிக்குமா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அம்மாதிரி இடங்களில் யாரும் தங்கத்தை எடுக்க மாட்டார்கள் என்று தன் பங்குக்குச் சுட்டிக்காட்டி உள்ளார் விஜயகுமார்.

கோலார் தங்க வயல் இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

தமிழகத்தில் லித்தியம் கிடைக்குமா?

திருவண்ணாமலையில் லித்தியம் கிடைப்பதாக வெளியான தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதல்ல.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் சில பகுதிகளில் லித்தியம் அதிக அளவில் இருப்பதாக இந்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இதேபோல், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் லித்தியம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வியக்க வைக்கும் வியாபாரம்

தமிழகத்தில் மாதந்தோறும் பல்லாயிரம் கோடிகளுக்கு தங்கம் விற்பனையாகிறது.

உண்மையான அளவு குறித்து மாறுபட்ட கணக்குகள் வெளியானாலும், கடந்து சென்ற கொரோனா நெருக்கடியின்போது வெளியான விவரங்களை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அச்சமயம் முடக்க நிலையின்போது இரண்டு மாதங்களில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தங்க, வெள்ளி நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

அரசாங்கத்துக்கும் ஏறக்குறைய ரூ.350 கோடி வரி இழப்பு ஏற்பட்டதாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் ஸ்ரீராம் கடந்த 2021, ஜூலை 4ஆம் கூறியிருந்தார்.

“இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 800 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 50% தங்கம் தென்னிந்தியாவில் விற்பனையாகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் 60% தங்க நகை நுகா்வு உள்ளது.

“அந்த வகையில் பழைய தங்கம் கொடுத்து, புதிய தங்கம் வாங்கும் சுழற்சி முறையில் ஏறக்குறைய 50% அளவுக்கு தங்க நகை வியாபாரம் செய்யப்படுகிறது,” என்று திரு ஸ்ரீராம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்