சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில் அக்கட்சியில் ஒரு தரப்பினர் திமுகவுடனான கூட்டணிக்கு எதிராகச் செயல்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைக்க இளம் தலைவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுகவுடனான கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை எனக் கூறியுள்ளார்.
தவெகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஒரு மாதமாகவே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் திமுகவுடன் நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டணி நீடிப்பதாகவும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
“2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. தவெகவுடன் கூட்டணி என்ற தகவல் வதந்தி,” என்றார் கிரிஷ்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இம்முறை தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
தொடக்கவிழா அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம் பெற்று இருந்ததால் தமிழக காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை எப்படி பயன்படுத்தலாம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்திலும் புதுவையிலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகத் திட்டமிட்டு இருப்பதாகவும், அடுத்து தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகி ஒருவர் விஐய்யை சந்தித்து பேசியதையடுத்து இந்த ஆருடம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் இந்த ஆருடத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

