கரூா் சம்பவம்: தவெக நிா்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை

1 mins read
7b802fbe-6b2a-4d40-88da-9b2201954cea
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். - கோப்புப் படம்: இந்து

சென்னை: கரூா் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு தவெக நிா்வாகிகள், கரூா் மாவட்ட காவல்துறையினர் உள்பட எட்டுப் பேருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அழைப்பாணை விடுத்துள்ளதாக தினமணி உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், அங்கு கூட்டம் நடைபெற்ற இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை மேற்கொண்டனா். மேலும், தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், இணை பொதுச் செயலா் சி. டி. ஆா். நிா்மல்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், காவல்துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட விசாரணைக்காக தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி. டி. ஆா். நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் இம்மாதம் 29ஆம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகுமாறு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்