கொளத்தூர் தொகுதித் தேர்தல் வழக்கு: ஸ்டாலின் மனு தள்ளுபடி

கொளத்தூர் தொகுதித் தேர்தல் வழக்கு: ஸ்டாலின் மனு தள்ளுபடி

கோப்புப் படங்கள்: தினத்தந்தி

03 Sep 2026 - 6:20 pm

1 mins read

சென்னை: கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வான தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்விகண்டார் மு.க. ஸ்டாலின். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக அவர் புகார் எழுப்பினார்.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒப்புகைச் சீட்டுகளை வழங்கும் ‘விவிபேட்’ இயந்திரங்கள் வழங்கிய அனைத்துச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

வழக்கமாக, இந்தியத் தேர்தல் விதிகளின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாள்களுக்குள் தேர்தல் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

எனினும், தேர்தல் ஆணையத்தின் இயந்திரச் சரிபார்ப்புப் பணிக்குப் பின்பே முறைகேடுகள் தெரிந்ததால், இந்தத் தாமதத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதியை உள்ளடக்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததன்று எனக் கூறி வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்தது.

குறிப்புச் சொற்கள்