சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இவ்வாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தமது மனுவில் அவர் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தது.
குறிப்பிட்ட 13 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட ஒப்புகைச்சீட்டு இயந்திரம் (விவிபேட்), வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை பொறியாளர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆறு வாக்குச்சாவடிகளில் பல்வேறு முறைகேடுகளும் மென்பொருள் கோளாறுகளும் கண்டறியப்பட்டதாகத் திரு ஸ்டாலின் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையிலும், உரிய வழிகாட்டி நெறிமுறைகளின்படியே சோதனைகள் நடந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
எனவே, முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும் வி.எஸ். பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்துத் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் திரு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


