தஞ்சாவூர்: மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வுகாண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழக விவசாயிகள் அரசின் இந்த நிலைப்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தீர்மான நகல்களை எரித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை (ஜூன் 27) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தால் தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று போராட்டத்துக்கு தலைமை வகித்த உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
மேலும், தமிழக கர்நாடக அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் மேகதாது அணை தொடர்பான சட்டமன்றத் தீர்மானங்களைத் தீயிட்டு எரித்தனர்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் கர்நாடகாவுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்றும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் திரு மணியரசன் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக மாதவாரியாக தமிழகத்துக்கு நீரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் அணை தொடர்பான தனது நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

