சென்னை: இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள ஏதுவாக தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் புதிய பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் திடீர் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தைத் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு அண்மைக் காலங்களில் பெருந்தொல்லையாக மாறிவிட்டது. புதிய திட்டத்தில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மழைநீர் வடிகால்கள், நீர்வழித்தடங்களின் ஒட்டுமொத்த தாங்குதிறனைப் பொறுத்து வெள்ளப் பாதிப்புகள் கணக்கிடப்படும்.
சமவெளிப் பகுதிகளில் மட்டுமின்றி, தற்போது மலைப் பகுதிகளிலும் எதிர்பாராத வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2023ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், 2024ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகிய சம்பவங்கள் குறித்து தமிழக அதிகாரிகள் முக்கியத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தத் தரவுகளின் அடிப்படையிலும் பெருந்திட்டத்தில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
பேரிடர் சம்பவங்களின்போது ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் அவற்றைத் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் உறுதி செய்யப்படும், என்று தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நகர்ப்புறத் திட்டமிடல் தொடர்பான கல்வி நிறுவனங்களின் ஆலோசனைகளும் கருத்துகளும் கேட்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.