சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததில் விசிகவுக்கு மகிழ்ச்சி இல்லை என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிகவால் தவெக வெற்றிக்கு எப்படி மகிழ்ச்சியடைய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலான விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெற்றது.
அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், ஆட்சி அமைப்பதற்குத் தவெக தலைவர் விஜய் மதச்சார்பற்ற சக்திகளிடம் ஆதரவு கோரியது வியப்பளித்ததாகக் குறிப்பிட்டார்.
சில தரப்பினர் திமுகவுக்கு விசிக துரோகம் செய்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட திரு திருமாவளவன், விசிகவுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய் நினைத்திருந்தால் அதிமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு, மதச்சார்பற்ற சக்திகளாக, களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள தங்களைப் போன்றவர்களை அழைத்து ஆதரவு கேட்டது துணிச்சலான முடிவு என்றார்.
“திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமை அறிவித்துவிட்டது. நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை.
“தவெக அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும், இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை,” என்றார் திருமாவளவன்.
தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், விசிக பிரமுகர் ஒருவரைத் திமுகவில் இணைத்துக்கொண்டதன்மூலம் விசிகவுடன் உறவு இல்லை என்று மறைமுகமாகத் தெரிவிப்பது திமுக தலைமைதான் என்றார்.
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆட்சிக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 1ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர் விஜய்.
மிக விரைவில் புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அக்கூட்டணியில் இணைவதை திருமாவளவன் உறுதி செய்துள்ளார்.

