சென்னை: முதன்முறையாகத் தேர்தல் களம் கண்டுள்ள விஜய் பல்வேறு சிக்கல்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பலரும் இம்முறை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பதிவிட்டு வருவதைக் காண முடிவதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்கள், இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வெளிநாடுவாழ் தமிழர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது மட்டுமே வழக்கமாக இருந்தது. விமர்சனங்கள், கட்சிகளுக்கான ஆதரவு என்பதையும் மீறி, தேர்தலில் நேரடிப் பங்கேற்பு என்பதில் ஆர்வம் காட்டியதில்லை.
தேர்தலில் வாக்களிக்கவும் வேட்பாளர், கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டும் நேரில் வருவதானால், கணிசமான தொகை செலவாகும் என்பதே இதற்குக் காரணம்.
ஆனால், நடிகர் விஜய் அரசியல் களம் கண்ட பிறகு வெளிநாடுவாழ் தமிழர்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாக்குரிமை உள்ள புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பி, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவதாகவும் குறிப்பாக, அவருக்கு வாக்களிக்கத் தயாராகி வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்காக ‘அண்ணா இது உனக்காக’ என்ற முழக்கத்துடன் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். துபாய், பிரான்ஸ், சவூதி அரேபியா, குவைத், ஓமான், அமெரிக்கா, ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் இத்தேர்தலில் தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தமிழகம் வரவுள்ளனர். இதற்காகப் பதிவு செய்துள்ள விமானப் பயணச்சீட்டையும் அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளை இழந்தது அதிமுக. திமுகவுக்கும் இத்தகைய பாதிப்பு இருந்தது.
இந்நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்களின் விஜய் ஆதரவு நிலைப்பாடு காரணமாக, இதர கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தேர்தல் நடத்தல் விதிமுறைகளை மீறியதாக விஜய் உள்ளிட்டோர் மீது சென்னை காவல்துறையினர் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
தியாகராயர் நகர் தவெக வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

