1996ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தல் தமிழகச் சூழலை மாற்றியது. ஜெயலலிதாவின் அதிமுக அரசுமீது பல்வேறு ஊழல் புகார்கள் குவிந்தன. மக்களிடம் அதிருப்தியும் எழுந்தது. இதற்கிடையே திமுகவிலிருந்து வைகோ வெளியேறி மதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
11வது தேர்தல் 1996
அத்துடன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே பாதியில் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டார். இந்நிலையில் 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் விருப்பத்திற்கு மாறாகப் பிரதமர் நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி என அறிவித்தார். இதனால், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. இது திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘பாட்ஷா’ படத்தின் வெள்ளிவிழா மேடையில் தமிழ்நாட்டின் சட்டஒழுங்குப் பிரச்சினை குறித்துப் பேசியிருந்தார்.
இப்படி ஜெயலலிதா ஆட்சியின்மீது பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு அலைகள் சூழ்ந்தன. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்தின் ஆதரவும் கிடைக்க, தேர்தல் களைகட்டியது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 221 இடங்களைக் கைப்பற்றியது.
திமுக கட்சி 42 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று 173 இடங்களைப் பிடித்தது. அதிமுக நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது. அதிமுக தலைவர் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் தோற்றுப்போனார்.
12வது தேர்தல் 2001
இந்தத் தேர்தல் 2001ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் சிறப்பாகவே செயல்பட்டிருந்த திமுக அரசு தோல்வியைச் சந்தித்தது.
இதற்குக் காரணம் இந்தத் தேர்தலில், ஜி.கே.மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் கைகோத்ததுதான். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்தது.
திமுக கூட்டணியை ஜி.கே.மூப்பனார் முறிக்கக் காரணம் 1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கட்சி கூட்டணி அமைத்ததுதான். இந்நிலையில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக கட்சி, தமாகா, பாமக, சிபிஎம், சிபிஐ எனப் பெரிதாகக் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது.
இதில் அதிமுக 132 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. திமுக 31 இடங்களையே பிடித்தது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்.
13வது தேர்தல் 2006
இந்தத் தேர்தலில் திமுக கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 69 இடங்களைப் பிடித்தது.
திமுக 96 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கலைஞர் கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்பதால் சிறுபான்மை அரசாக அது இருந்தது.
14,15வது தேர்தல்கள் (2011, 2016)
இந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவே வென்றது. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் ஏப்ரல் 13ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் தமிழகத்தின் மின்தட்டுப்பாடு, 2ஜி தொலைத்தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் பேசுபொருளாயின.
இதனால், அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்றது. அதிமுக மட்டும் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
அதனுடன் இணைந்து போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக 29 இடங்களைப் பிடித்துச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியானது. இந்தத் தேர்தலில் திமுக 23 இடங்களையே வென்றது.
பிறகு, 15வது சட்டமன்றத் தேர்தல் 2016ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி நடந்தது. இதில் அதிமுக 136 இடங்களைப் பிடித்தது. திமுக கடந்தமுறையைவிடக் கூடுதலாக 66 இடங்கள் அதிகம் பெற்று 89 இடங்களில் வென்றது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா காலமானார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும், 2017ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புவர, சசிகலா தண்டனை பெற்றார். இதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2018ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.
இந்நிலையில், திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து 2020ஆம் ஆண்டு கொவிட் கிருமித்தொற்றுப் பரவல் உலகையே உலுக்கியது. இதன்பிறகு 2021ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல் பெரும் நெருக்கடிகாலத் தேர்தலாக அமைந்தது.
16வது தேர்தல் 2021
இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. இதில் திமுக 133 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார் மு.க.ஸ்டாலின்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தொடர்ந்து, பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம் எனப் பல்வேறு சிறப்பான திட்டங்களைக் கொண்டுவந்தார்.
இந்நிலையில் தற்போது 17வது சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக ஆகியவற்றுடன் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என நான்கு முனையாகப் போட்டிக்களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

