விஜய் முதல்வராவதைத் தடுக்கவில்லை: ரஜினி விளக்கம்

விஜய் முதல்வராவதைத் தடுக்கவில்லை: ரஜினி விளக்கம்

2 mins read
17972352-f175-46ef-8e6a-7acff486d6c6
ரஜினி. - கோப்புப்படம்: டெக்கான் கிரானிக்கல்

சென்னை: தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராவதைத் தடுக்கத் தாம் முயற்சி மேற்கொண்டதாக வெளியான தகவலை நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கத் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக தொண்டர்கள் இனிதான் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் அது விஜய்யைத்தான் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருந்தார் ரஜினி.

இதையடுத்து, விஜய் முதல்வராவதைத் தடுக்க அதிமுக, திமுக ஆகிய கூட்டணி ஆட்சி அமைய ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தம்மைப் பற்றி வெளியான விமர்சனங்களுக்குப் பதிலளிக்காவிட்டால், அவற்றை மக்கள் உண்மை எனக் கருதிவிடுவார்கள் என்பதால் விளக்கம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமக்கும் ஸ்டாலினுக்கும் இடையே கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலான நட்பு உள்ளது என்றார் ரஜினி.

“விஜய் முதல்வராவதைத் தடுக்க, இரு பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு நான் தரங்கெட்ட மனிதன் அல்லன்,” என்றார் ரஜினி.

விஜய் முதல்வராவதில் தமக்கு எந்தவிதப் பொறாமையும் இல்லை என்றும் வெற்றி பெற்றதுமே விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்தது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால்கூட எனக்குப் பொறாமை வந்திருக்குமா எனத் தெரியவில்லை. காரணம் அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் போய்விடுமோ என்றுதான் நினைத்திருப்பேன்.

“விஜய் தனியாகப் போட்டியிட்டு வென்றுள்ளார். எம்ஜிஆர், என்டிஆரைவிடப் பேரளவு வெற்றி பெற்றுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் ரஜினி.

தாம் அரசியலுக்கு வந்திருந்தால் 100 விழுக்காடு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்