தமிழக அரசியல் ஆடுகளம் பரபரப்பாகத் தயாராகிவிட்டது. ஆட்டக்காரர்கள் தனியாகவும் தங்கள் கூட்டாளிகளுடனும் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு விதமான அணிகள் மோதுவதால், அடுத்த எட்டு மாதங்களுக்கு ஜனநாயகத் திருவிழாதான்.
திமுகவின் வண்ணக் கனவுகள்
‘இருநூறு தொகுதிகள் இலக்கு’ என்கிற நோக்கத்துடன் திமுகவின் ஆட்டம் தொடங்கியிருக்கிறது.
கடந்த தேர்தலில் திமுக தோற்ற தொகுதிகள், கோஷ்டிப் பூசல் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, வெற்றி காண வேண்டியவை, நிறத் தொகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் வலிமையாக இருக்கும் தொகுதிகள் ஆரஞ்சு நிறத் தொகுதிகள்.
தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெற்றிக்கான மெல்லிய பச்சை நிறத் தொகுதிகள்.
திமுகவின் கோட்டைகளாக இருக்கும் தொகுதிகள் அடர் பச்சை நிறத் தொகுதிகள்.
இப்படி தொகுதிகளை வண்ண வண்ணமாய்ப் பிரித்து வெற்றியை மீண்டும் ருசிக்க வேலை செய்கிறது திமுக.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே மதுரை, கோவை, வேலூர் பகுதிகளில் ‘ரோட் ஷோ’ நடத்தியிருக்கும் ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக கட்சிப் பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் எதிர்க்கட்சியினரின் வீடுகள் உட்பட தமிழகத்தின் 100% வீடுகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்க தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
இப்படியாக புதுப்புது முழக்கங்களுடன் வேகமெடுத்திருக்கிறது திமுகவின் தேர்தல் ஆட்டம்.
சாலைக் காட்சி, பொதுக்கூட்டம், மக்களுடன் நேரடிச் சந்திப்பு எனப் பல உத்திகளுடன் ஸ்டாலின் பிரசாரம் அமைந்து வருகிறது.
அதிமுகவின் ‘காப்போம் - மீட்போம்’ திட்டம்
கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த வாக்கில் அதிமுகவைவிட, ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது திமுக.
அதனால், ‘இந்த முறை வெற்றியை விடக்கூடாது’ எனத் துரத்த ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
‘2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தது திமுக. இவை பொய்யான வாக்குறுதிகள். 525ல் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள்?’ எனப் பொதுக்கூட்டங்களில் கேள்வி எழுப்புகிறார் இபிஎஸ்.
மக்களைப் பல வகைகளில் வாட்டி வதைக்கிறது திமுக எனச் சொல்லி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் களமிறங்குகிறது அதிமுக.
ஜூலை 7ஆம் தேதி முதல் கோவையில் இருந்து முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ்.
இந்தப் பயணத்தில் ‘ரோட் ஷோ’, பொதுக்கூட்டம், வாகனப் பிரசாரம், ‘பூத் கமிட்டி’யினருடன் ஆலோசனை எனப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பயண வழித்தடங்களை வகுப்பதில் முக்கியப் புள்ளிகள் கொண்ட குழு இயங்குகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்தவரை, அவரது தேர்தல் பயணத்திட்டத்தை வகுத்துத் தந்தவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதனால் ஜெவிடம் நல்ல அபிமானம் பெற்றிருந்தார் செங்கோட்டையன்.
இப்போது இபிஎஸ்சுக்கு வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் பயணத்திட்டம் வகுத்துத் தருகிறார்கள்.
“திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி,” எனப் பதிவிட்டு, களத்தில் இறங்கிவிட்டார் இபிஎஸ்.
நாதகவின் ‘தனித்து நில்’ முழக்கம்:
‘தமிழ்த் தேசியம்’ என்ற இலக்கை முன்னிறுத்திப் போராடி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
“கூட்டணியில் பத்து தொகுதிகளை வாங்கி வெற்றிபெற்று, என்ன சாதிக்கப் போகிறோம்? நாங்கள் எப்போதுமே தனித்துத்தான் நிற்போம்,” என தன் உறுதியான கருத்தை ஊர் ஊராய்ப் பதிவு செய்கிறார் சீமான்.
“நூறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தயார் செய்துவிட்டோம். மீதமுள்ள 134 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு நடக்கிறது. சுமார் 150 தொகுதிகளில் இளையர்களே போட்டியிடுவார்கள்,” எனவும் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், 32 லட்சம் வாக்குகளை சீமான் கட்சி பெற்றதால், அவரை இழுக்க அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் சீமானோ, திருச்சிக் கூட்டத்தில் ‘புலி தனியாகத்தான் வேட்டைக்குப் போகும்’ எனச் சொன்னவர், இன்னொரு விஷயத்தையும் முன்னெடுத்துள்ளார்.
‘ஏபிசிடி ஃபார்முலா’
ஏ (A) - அதிமுக (ADMK), பி (B) - பாரதிய ஜனதா (BJP), சி (C) - காங்கிரஸ் (Congress), டி (D) - திமுக (DMK)
இந்த நான்கையும் எதிர்த்துக் களமாடும் நோக்குடன் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான்.
முன்னோட்டமாக ஒவ்வொரு நகரங்களிலும் சீமானின் கட்சித் தொண்டர்கள் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக, வேன் பிரசாரம், மக்களை நேரில் சந்திக்கும் திட்டங்களைச் செயல்படுத்தவிருக்கிறார்கள்.
தவெக தனியா? அணியா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுறுசுறுப்பாகத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது.
ஆகஸ்ட் 15 முதல் விஜய் சுற்றுப்பயணம் கிளம்புகிறார். ஏற்கெனவே கோவையில் பூத் கமிட்டி மாநாடு போட்டதுபோல் அடுத்ததாக மதுரையில் நடத்துகிறார். 42 நாள்கள் சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 15ல் தஞ்சாவூரில் இருந்து தொடங்குகிறார். இதற்காக பிரசார வாகனம் விஜய்க்காக சகல வசதிகளுடனும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் அந்தந்த ஊரில் விஜய் பேசுவதற்கான விஷயங்களை, உள்ளூர் பிரச்சினைகளைப் பட்டியல் போடச் சொல்லியிருக்கிறது தலைமைக் கழகம் என்கிற விஷயத்தில் தெளிவான முடிவு எட்டப்படாமலேயே இருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது, ‘ஐம்பது தொகுதிகள், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தவெகவின் முதல்வர் ஆட்சி’ என்கிற கெடுபிடிகளை வைத்தனர். இதனால் அதிமுக, விஜய்யுடன் கூட்டணி எனும் ஐடியாவை தள்ளிப்போட்டுள்ளது.
‘நாம் தனிச்சு நின்றால், சீமான் கட்சி போல்தான். அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பில்லை’ என கட்சிப் பிரமுகர்கள் விஜய்யிடம் கூறிவருகிறார்கள். இதை மனத்தில் கொண்டே விஜய்யின் பிரசாரத்திட்டமும் பிரசாரப் பேச்சின் உள்ளடக்கமும் அமைக்கப்படுகிறது.
அதேசமயம், ‘திமுக எதிர்ப்பு’ எனும் இலக்கை விடுவதாக இல்லை விஜய்.
தனி ஆவர்த்தனம்
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அணிதாவுமோ என்கிற ஊசலாட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் இணைய பாமக நிறுவனர் ராமதாசும் பாஜக கூட்டணியில் இணைய அவரது மகன் அன்புமணியும் மோதுவதால் பாட்டாளி மக்கள் கட்சி விழிபிதுங்கி நிற்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மாவட்டச் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார் அன்புமணி.
தேமுதிக இன்னும் தனது கூட்டணித் தலைமையை உறுதி செய்யவில்லை.
“2026 ஜனவரி 9ஆம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்,” என அக்கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகிய நான்கு பிரமுகர்கள் ‘முதல்வர் நான்’ என்கிற கொடியை உயரத்தில் பிடித்திருக்கிறார்கள். இதில் யாருடையது வெற்றிக்கொடியாக இருக்கும் என்பது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்தான் தெரியும்.