ஸ்டாலின் தோல்வி; உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பு

ஸ்டாலின் தோல்வி; உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பு

1 mins read
ae83b6cd-2f8a-46bc-a30a-d2e740d139e0
உதயநிதி ஸ்டாலின். - கோப்புப் படம்: தி ஃபெடரல்

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றுள் முக்கியமான மாற்றமாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 15 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.

எனினும், சட்டமன்றத்தில் தவெகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. எனவே, சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உதயநிதிக்கு ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த அனுபவம் உள்ளது. இம்முறை தேர்தலில் திமுக வாகை சூடியிருந்தால், ஆட்சிக்காலம் முடிவதற்குள் உதயநிதி முதல்வராகப் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் இருந்தது.

இதனிடையே, திமுகவின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

விஜய்யும் உதயநிதியும் இளம் தலைவர்கள் என்பதால், அவர்கள் இருவரும் துடிப்பாகச் செயல்படுவர். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்