சென்னை: நீட் தேர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் விவாதிப்பதற்காக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தலைநகர் டெல்லிக்கு விரைந்தார்.
அவருடன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இந்தப் பயணத்துக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வரின் அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சரை டெல்லியில் சந்தித்து பத்துக்கும் மேலான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்.
"தமிழகத்தில் தினசரி நான்கு முதல் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. எனவே, மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்த உள்ேளாம்.
"மாநிலத்தில் உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க அனுமதி கேட்க உள்ளோம்.
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை உடனடியாகத் துவங்கவும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவும் வலியுறுத்த உள்ளோம்," என்று கூறியவர், சென்னை அருகாமையில் சித்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக சில இடங்களைத் தேர்வு செய்து உள்ளதாகவும் சொன்னார்.
சட்டப்பேரவையில் எதிரொலித்த எய்ம்ஸ் பிரச்சினை
இதற்கிடையே, நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பங்கேற்றுப் பேசிய மா. சுப்பிரமணியன், "மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை," என்றார்.
இதற்கு பதிலளித்த அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, "மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்தது அதிமுகதான்," என்று சொன்னார்.
அதற்கு மா.சுப்பிரமணியன், "எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியைப் பெற்றதோடு ஒரு பெயர் பலகை கூட வைக்கவில்லை," என குற்றம்சாட்டியவர், தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும் அவற்றில் பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, சில மாநிலங்களில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் கூறிய அமைச்சர், அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு வேலையுமே நடக்கவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில், அவர் டெல்லியில் மத்திய அமைச்சரை இந்தப் பிரச்சினை குறித்து சந்தித்துப் பேசி ஒரு தீர்வு காண இருப்பதாக 'ஒன் இந்தியா' ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

