திருவண்ணாமலை: பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் எத்தனை பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்க இயலாமல் திருவண்ணாமலை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் திணற வேண்டியிருந்தது.
சனிக்கிழமை அன்று, திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர், அங்குள்ள ஆரணி, வந்தவாசி பகுதிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் மிகக்குறைவாக இருப்பதாகக் கவலை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் மிகக்குறைவாக உள்ள பகுதிகள் இவைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், சில ஆசிரியர்கள் தரமற்ற முறையில் கற்பிப்பதாகவும் பல ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால்தான் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக தரமின்றிக் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் மட்டும் எத்தனை பேர் தோல்வியடைந்துள்ளனர் என்று துணை முதல்வர் எழுப்பிய கேள்விக்கும் அதிகாரிகளிடம் பதில் இல்லை.
இதனால் ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், அரை மணி நேரத்திற்குள் அனைத்து புள்ளி விவரங்களையும் தருவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உறுதியளித்தார்.
இதையடுத்து, மாணவர்களின் கல்விநிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.