தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநகராட்சிப் பள்ளிக்குத் திடீர் வருகை; மாணவர்களைப் பாராட்டிய விஞ்ஞானி மயில்சாமி

1 mins read
96ba3c97-78ca-4309-8161-5eff8aecc749
விஞ்ஞானி மயில்சாமி நேரில் வந்தது மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தகுமார் கூறினார். - படம்: ஊடகம்

கோவை: மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்துக் கேள்விப்பட்ட ‘இஸ்ரோ’ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னறிவிப்பு இன்றி அப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களைப் பாராட்டினார்.

கோவையில் கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் பாடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும், ‘ரோபோட்டிக்ஸ்’, அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக நாளேடு ஒன்றில் விரிவான செய்தி வெளியானது. இச்செய்தியை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்த்துள்ளார்.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த மாநகராட்சிப் பள்ளிக்கு நேரில் சென்றார்.

அங்கு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டியதுடன், சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இதுகுறித்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவியல் ஆர்வத்திற்கான விதைப்பும் ஊக்கமும் பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்றார்.

“அரசு, தன்னார்வலர்களின் இணைப்பில் அரசுப் பள்ளிகளில், ‘ஸ்டெம் லேப்’ அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய மாணவர் கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது, அது மற்ற பள்ளிகளுக்கும் ஊக்கமளிக்கும்,” என்றார் மயில்சாமி.

மாணவர்களின் முயற்சியை அறிந்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் வந்தது மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தகுமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்