சென்னை: தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்கு நாளை (ஏப்ரல் 23) தேர்தல்.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சிகளுக்கிடையிலான இருமுனைத் தேர்தலாக இன்றி, விஜய்யின் அரசியல் வருகை, மாறி வரும் தேசிய சூழல் ஆகியவற்றினால் இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போட்டி கொண்டதாக அமைந்துள்ளது.
நகர்புறங்கள், இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக விஜய் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் பெண்கள் வாக்குகளே இறுதி தீர்ப்பை தொடர்ந்து தீர்மானிக்கும் சக்தி என்பதால் அவர்களைக் கவரும் வகையில் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்தன. நிதி உதவி திட்டங்கள், அத்தியாவசிய பொருளுகளுக்கு மானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி மகளிர் வாக்குகளை கவர தீவிரம் காட்டியிருந்தனர்.
முதன்முறையாக வாக்காளர் அதிகமாக இருப்பதால், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, தொழில் முனைப்புத்திறன் போன்றவையும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
[ο]வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
[ο] மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு. 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
[ο]5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
[ο]83,875 காவல்துறைப் பணியாளர்கள், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர், 40,427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
[ο]மொத்தம் 136 பொதுப் பார்வையாளர்கள், 50 காவல் பார்வையாளர்கள், 150 செலவினப் பார்வையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பலத்த பாதுகாப்புடன் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
பிரசார ஓய்வு நேரம், தேர்தல் விதிமுறைகள்
தேர்தல் பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றன. அப்போதிலிருந்து வியாழக்கிழமை வாக்குபதிவு நிறைவடையும் மாலை 6 மணிவரை 48 மணிநேரத்துக்குப் பிரசார ஓய்வு நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைமுதல் நாளை புதன்கிழமை (ஏப்ரல் 23) நள்ளிரவு 12 மணிவரை மதுக்கடைகள், மதுக்கூடங்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுக் காலத்தில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தேர்தல் விவகாரங்களை, திரைப்படம், தொலைக்காட்சி, ‘எப்எம் ரேடியோ’, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தச் சாதனம் வாயிலாகவும் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டுசெல்லக்கூடாது.
அத்தொகுதியின் வாக்காளர் அல்லாத, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் அனைவரும் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
தமிழகம் முழுதும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் செவ்வாய்க்கிமை மாலை முதலே காவல்துறையினர் தீவிரச் சோதனை நடத்தி, தொகுதிக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரப்புரைகளை முடித்துக்கொண்ட கட்சிகள்
சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி, சென்னை எழும்பூரில் சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், காரைக்குடியில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் இறுதிக்கட்ட பரப்புரைகளை நிறைவு செய்தனர்.
ரூ.1,200 கோடிக்கு மேல் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம்
தேர்தல் விதிகள் நடப்புக்கு வந்த மார்ச் 15ஆம் தேதியிலிருந்து, தலா 2,106 பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய சோதனையில் செவ்வாய்க்கிழமை வரையில் ஏறக்குறைய ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்கம், மதுபானங்கள், தங்கம், வெள்ளிப் பொருள்கள், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

