இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: திருமா திட்டவட்டம்

இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: திருமா திட்டவட்டம்

கோப்புப் படம்: தி நியூஸ் மினிட்

30 Jun 2026 - 3:15 pm

1 mins read

சென்னை: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு எந்தவிதமான அழுத்தத்தையும் தர விரும்பவில்லை என்றும் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

அதிமுக சட்டமுன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகுவது நல்ல அரசியல் அறிகுறியன்று என்றும் அதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று கடந்து செல்ல முடியாது என்றார் திரு திருமாவளவன்.

விசிக அமைச்சரின் துறையை மாற்றித் தருமாறும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறும் ஆட்சித் தலைமையிடம் விசிக எந்தவிதக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று குறிப்பிட்ட திரு திருமாவளவன், சில ஊடகங்கள்தான் இதுபோன்ற தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புவதாகச் சாடினார்.

தவெக ஆட்சிக்கு நீடித்த ஆதரவை வழங்குவதில் விசிக உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முயற்சியைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
விசிகதிருமாவளவன்இடைத்தேர்தல்போட்டிதிமுகஅதிமுகஎம்எல்ஏதவெக