சென்னை: தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திரு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், தவெக அரசின் நான்கு மாத ஆட்சிக்கு மக்களின் மதிப்பீடாகவே இது பார்க்கப்படுகிறது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குகள் எண்ணும் பணியில், தொடக்கத்தில் தபால் வாக்குகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
எனினும் தாராபுரம் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் நிலைமை தலைகீழானது. அங்கு அதிமுக வேட்பாளர் பானுமதி 6,506 வாக்குகள் பெற்று, 6,456 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமாவை 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். திமுக வேட்பாளர் 4,995 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். தாராபுரத்தில் 80.25 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருந்தன.
இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதுத் தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன. தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருந்தன. 86.26 விழுக்காட்டு அதிகபட்ச வாக்குப்பதிவு கண்ட மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேலு, திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 பேர் போட்டியிட்டனர்.
இத்தொகுதியின் வாக்குகளை எண்ணும் நிலையத்தில் 11வது மேசையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், விவிபேட் (VVPAT) சீட்டுகள் மூலம் வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டல அரசியல் செல்வாக்கு, உள்ளூர்ச் சமூகக் காரணிகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்றுள்ள இத்தேர்தலில் வெற்றிபெறுவது தவெக, அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
