‘இரட்டை இலை’க்கு வாக்கு சேகரித்த தவெக செங்கோட்டையன்

‘இரட்டை இலை’க்கு வாக்கு சேகரித்த தவெக செங்கோட்டையன்

1 mins read
551d3b12-d6b9-420c-8bf0-33bfff1ef14e
செங்கோட்டையன். - கோப்புப் படம்: விகடன்

ஈரோடு: தவெக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சியின் விசில் சின்னத்துக்குப் பதிலாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பிரசாரத்தின்போது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் செங்கோட்டையன். அப்போது அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, ‘உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்துக்கு அளியுங்கள்’ என்று வாய்தவறி கூறினார்.

எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தே எனக்குப் பழக்கமாகிவிட்டது,” என்றார்.

“கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு சேகரித்தபோது, ‘எப்போதும்போல் உங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிப்போம்’ என்று ஒரு மூதாட்டி என்னிடம் கூறினார்.

“அப்போது நான், ‘இரட்டை இலைக்கு வேண்டாம். விசில் சின்னத்தில் போட்டியிடுகிறேன்’ என்றேன். அதைக் கேட்டு விசில் சின்னத்தில் வாக்களிப்பதாகக் கூறிச் சென்றார் அந்த மூதாட்டி,” என்று சமாளித்தார் செங்கோட்டையன்.

எனினும், அவரது பேச்சைக் கேட்டு தவெகவினரே சிரித்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்