பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இன்னுமொரு விசித்திரச் சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் கூட்டுறவு அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அவர் பெற்ற வாக்குகள் 83,374. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் திரு சீனிவாச சேதுபதிக்குக் கிடைத்த வாக்குகள் 83,375.
வாக்குகள் எண்ணப்பட்டபோது, இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் இருவருக்கும் இடையே 30 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. திரு பெரியகருப்பன் முன்னிலையில் இருந்தார். அதுவரை, தவெக 107 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக அல்லது வென்றதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் ஒரு வாக்கு அதிகம் பெற்று வரலாறு படைத்தார் திரு சீனிவாச சேதுபதி. அவரின் வெற்றியைத் தொடர்ந்து தவெகவுக்கு 108 இடங்கள் கிடைப்பது உறுதியானது.
திருப்பத்தூர் தொகுதி, திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது. திமுக அங்கு எட்டு முறை வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்கு முறை அங்குப் போட்டியிட்டு வெற்றிக்கனியைப் பறித்துள்ளார் திரு பெரியகருப்பன். ஆனால் இம்முறை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அவர் பறிகொடுத்தார்.

