சென்னை: தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் 2021ல் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடு உள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு உத்தரவிடக்கோரி அந்தத் தொகுதி வாக்காளர் குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு புதன்கிழமை (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. தேர்தல் தொடங்கிவிட்டதால் இதனைத் தேர்தல் மனுவாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், உதயநிதியின் சொத்து விவரங்கள் தொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

