சென்னை: விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நடைபெற்றது. இதற்கு வருகை தந்த விஜய்க்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் விசிலடித்து விஜய்யை வரவேற்றனர்.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய அவர், தமக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவது உண்மையில்லை என்றும் மக்களுக்குத்தான் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
அழுத்தத்தைக் கண்டு தாம் எப்போதுமே அஞ்சுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக மக்களைக் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் குறைத்து மதிப்பிட்டு வந்ததாக விமர்சித்தார்.
“தவெக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு நிச்சயமாக முந்தைய ஆட்சியாளர்கள்போல் ஊழல் செய்ய மாட்டோம். ஒரு துளி ஊழல் கறைகூட எங்கள் மீது படிய விடமாட்டோம்,” என்றார் விஜய்.
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தம்மால் அடங்கிப்போகவும் அடிமையாகவும் இருக்க இயலாது என்றார் அவர்.
தீய சக்தி, ஊழல் சக்தி தமிழகத்தில் ஆட்சியில் அமரக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அடிமையாக இருக்க தாம் அரசியலுக்கு வரவில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே தாம் அரசியலுக்கு வந்திருப்பதாக விஜய் தெரிவித்தார். தன் மீது மட்டுமல்லாமல், தன்னுடன் இருக்கும் தோழர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றும் அதற்கேற்ப அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“என்னைப் போன்று எதற்கும் ஆசைப்படாத ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அவன் தன் கண் முன்னே நடக்கும் தவறுகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான்,” என்றார் விஜய்.
தமிழக அரசியல் கட்சிகள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் ஆனால் மக்கள் ஏற்கெனவே சரியாக மதிப்பிட்டு அடுத்த ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய முடிவெடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
“இன்றுள்ள கட்சிகள் அறிஞர் அண்ணா கூறியதை மறந்துவிட்டனர். ஆனால் நாம் அறிஞர் அண்ணாவை மறக்கக்கூடாது. அண்ணா தொடங்கிய கட்சியும் சரி, அவர் பெயரில் இயங்கும் கட்சியும் சரி இரண்டுமே பாஜகவிடம் பணிந்துவிட்டன,” என்றார் விஜய்.
இதையடுத்து விசில் சின்னத்தை கட்சியினருக்கு அறிமுகம் செய்த அவர், மொழிப்போர் தியாகிகளுக்கும் தவெக கொள்கை தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
சிபிஐ விசாரணை, ‘ஜனநாயகன்’ படம் தொடர்பான நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக விஜய் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பார் என்றும் அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் பலவிதமான ஆருடத்தகவல்கள் வலம்வந்தன.
ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவையும் அதிமுகவையும் பாரபட்சமின்றி கடுமையாக விமர்சித்தார்.
விஜய் மேடையில் இருந்தபடி விசில் அடிக்க, அரங்குக்கு கீழே இருந்த கட்சியினரும் தங்களிடம் இருந்த விசிலை ஊதி அவரை உற்சாகப்படுத்தினர்.

