சென்னை: பெரும் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை (மே 9) காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி) விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று டைம்ஸ்அஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்தது
பல பேச்சுவார்த்தைகள், இழுபறிகளுக்குப் பின்னர் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற்ற விஜய், நெற்றியில் குங்குமப் பொட்டும் முகம் நிறைந்த மகிழ்ச்சியுமாக, கட்சியினரின் ஆரவாரத்துடன் வெள்ளிக்கிழமை (மே 8) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்தார்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்து தவெக கூட்டணியின் பெரும்பான்மையை உறுதிசெய்தார் விஜய்.
இறுதியாக, மூன்றாவது சந்திப்பில் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேக்கர் ஒப்புதல் அளித்தார்.
தமிழகச் சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளிவந்து, நான்கு நாள்கள் ஆன நிலையில், அரசியல் சூழல் சினிமா இறுதிக் காட்சியைப்போல வெள்ளிக்கிழமை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.
தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக,மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரப்பட்டது. ஆட்சி, அதிகாரப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்துடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்ததுடன், வரவிருக்கும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்ற முடிவையும் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். ஆனால், 118 எம்எல்ஏக்களின் உறுதிக் கையொப்பம் வேண்டும் என்று ஆளுநர் கூறிவிட்டார்.
சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை தவெக நாடிய நிலையில், திமுக-அதிமுக கூட்டணி அமையும் என்று பேச்சு எழுந்ததில் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுமே ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
இதன் மூலமாக விசிக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 என மொத்தமாக ஆறு இடங்கள் சேர்ந்து தவெகவின் மொத்த பலம் 118 ஆக அதிகரித்தது.
ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில் தவெகவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் தெரிவித்தனர்.
“இன்னொரு தேர்தலைத் தடுக்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையைத் தடுக்க நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம். அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். தவெகவுடன் கூட்டணி அல்ல, ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு தந்திருக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று இந்தியாடுடே செய்தி தெரிவித்தது.

