சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் குழுவை அமைத்துள்ளார் அக்கட்சி தலைவர் விஜய்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்டத் தொகுதி அளவிலான பிரசாரப் பணிகளை மேற்கொள்ள பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக பிரசாரக் குழுவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், கேத்ரின் பாண்டியன் உள்ளிட்ட பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆலோசனை, பிரசாரக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மற்ற கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. ஆளும் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போதே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் எனப் பலர் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, திரு அமித்ஷா சென்னையில் தங்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடுக்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை அறிவித்த கையோடு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
திமுக, அதிமுக கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டன.
தவெக தரப்பில் பிரசார நடவடிக்கைகள் ஏதும் தொடங்கப்படவில்லை என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வந்த நிலையில், அக்கட்சியின் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதற்கட்டமாக, பிரசாரக் குழு அமைத்து தேர்தல் நடவடிக்கைகளை தவெக தொடங்கியுள்ளது.

