தமிழகத் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை (மே 4) காலை 8.00 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழகத் தேர்தலில் இதுவரை இல்லாத ஐந்து முனைப் போட்டி நிலவியது.
திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) ஆகியவற்றோடு 5வதாக சசிகலா-பாமக நிறுவனர் ராமதாஸ் அணி போட்டியிட்டது.
முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் தவெக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியவில்லை. இதன் வரவால் இரு திராவிடக் கட்சிகளுக்கும் வாக்குகள் குறையும் என தேர்தல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான இளம் வாக்காளர்கள் தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுத்தர மற்றும் மூத்தவர்களும் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளதாக ஊடகங்களில் வெளியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் தனது கட்சியில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களை பிற கட்சிகள் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சியின் தலைவரான விஜய், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
பிற கட்சிகள் ‘குதிரை’ பேரம் மூலம் இழுக்கும் நடவடிக்கையை முறியடிக்க அண்மையில் 234 தொகுதி வேட்பாளர்களுடனும் விஜய் அவசரமாகப் பேசியதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தேர்தலில் வெற்றி பெற்று, சான்றிதழ் கிடைத்ததும் நேராகப் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும்,” என அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 62 மையங்களில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்கு ஒரு லட்சம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஐந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இணையம் வழியாக ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கிய மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா, தமிழகத்தில் 62 மையங்களில் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முழு அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து திங்கட்கிழமை (மே 4) வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் வன்முறை, முறைகேடு காரணமாக 285 வாக்குச்சாவடிகளில் மே 21ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே 2) அன்று அறிவித்தது.

