தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியத் தொழில்துறைத் தலைவருக்கு ‘கௌரவ சிங்கப்பூர்க் குடியுரிமை’

4 mins read
5f31d8c6-7ef8-40df-86f8-c154f8bc7520
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் தருண் தாசுக்கு கௌரவ குடிமகன் விருதை புதுடெல்லியில் நடந்த விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர்-இந்தியா உறவுகளுக்கும் அளப்பரிய பங்காற்றியதற்காக இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (CII) முன்னாள் தலைமை இயக்குநர் தருண் தாசுக்கு ‘கௌரவ சிங்கப்பூர்க் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம், ஜனவரி 15ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் திரு தாசுக்கு கௌரவக் குடிமகன் விருதை வழங்கினார்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் சிங்கப்பூரர் அல்லாத ஒருவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புக்காகச் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் உயரிய அங்கீகாரம், கௌரவக் குடிமகன் விருது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், அண்மையில் காலமான டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடாவிற்கு கௌரவக் குடிமகன் விருது வழங்கப்பட்டது.

விரிவான, மதிப்புமிக்க சேவைகளைச் சிங்கப்பூருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கியோருக்கும் வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், தகவல், தொடர்பு, கல்வி, சுகாதாரம், கலை, கலாசாரம், விளையாட்டு, சுற்றுலாத் துறை, சமூக சேவை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியோருக்கும் 2003ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.

“சிங்கப்பூர் அரசாங்கத்தின் கௌரவக் குடிமகன் விருதைப் பெற்றதில் பெருமதிப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார் 85 வயதாகும் தாஸ்.

“சிங்கப்பூருடனான எனது பயணம் 31 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. ‘சிங்கப்பூர்-இந்தியா ஃபீவர்’ எனும் பன்முகப் பங்காளித்துவத்தைக் கண்டுள்ளதோடு, அதன் உருமாற்றத்தையும் வளர்ச்சியையும் பல ஆண்டுகளாகக் காண்கிறேன். அது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது,” என்றும் அவர் கூறினார்.

இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநராகவும் தலைமை மதியுரைஞராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டவர் திரு தருண் தாஸ்.

முதன்முதலாக 1993ஆம் ஆண்டு இந்தியத் தொழில்துறைத் தலைவர்களைச் சிங்கப்பூருக்கு வழிநடத்தி வந்த திரு தாஸ், கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிங்கப்பூரின் அரசியல் தலைவர்களுடனும் வர்த்தகங்களுடனும் இருநாட்டு, இரு வட்டார மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கு அடித்தளமிட்டார்.

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் சிங்கப்பூர் செய்தியாளர்களை புதுடெல்லியிலுள்ள தாஜ் மகால் நட்சத்திர விடுதியில் சந்தித்தார் திரு தருண் தாஸ். 
விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் சிங்கப்பூர் செய்தியாளர்களை புதுடெல்லியிலுள்ள தாஜ் மகால் நட்சத்திர விடுதியில் சந்தித்தார் திரு தருண் தாஸ்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் சிங்கப்பூர்ச் செய்தியாளர்களைப் புதுடெல்லியிலுள்ள தாஜ்மகால் நட்சத்திர விடுதியில் திரு தாஸ் சந்தித்தார். சிங்கப்பூருடன் பணியாற்றிய தருணங்களையும் இருநாட்டு உறவுகள் குறித்த தமது சிந்தனைகளையும் அவர் பகிர்ந்தார்.

இருநாட்டின் முன்னாள் பிரதமர்கள் கோ சோக் டோங், மன்மோகன் சிங் ஆகியோரைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், சிங்கப்பூரின் பல தலைவர்களும் இந்தியாவுடனான உறவுகளை வலுவாக்க மேற்கொண்ட முயற்சிகளையும் மெச்சினார்.

1991ஆம் ஆண்டு உலகிற்கு இந்தியா அதன் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதற்குச் சிங்கப்பூர் உதவியதாகவும் அன்றைய பிரதமர் கோ தமது அறிவு, ஆற்றல், சிங்கப்பூரின் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி இந்தியர்களுக்கு உதவியதாகவும் அவர் சொன்னார்.

இந்திய நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் விருப்பமான இடம் என்று கூறிய திரு தாஸ், தென்கிழக்காசிய, ஆசிய, உலகச் செயல்பாடுகளுக்குத் தலைமையகமாகச் சிங்கப்பூரை அமைக்க அவை விரும்புகின்றன என்றும் இருநாட்டுக்கும் இடையிலான உறவு ‘உலோகங்களால் கட்டப்பட்டது’ என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்குத் திறன் பயிற்சிக்கான ஆற்றல் தேவைப்பட்ட வேளையில், தமது முதல் சிங்கப்பூர்ப் பயணத்தில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்குச் சென்றதை நினைவுகூர்ந்தார் திரு தாஸ். மிகவும் வியப்படைந்ததாகவும் அத்தகைய வசதிகளை இந்தியா முழுவதும் அமைக்கவேண்டும் என்ற வேட்கை எழுந்ததாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் உதவியுடன் இந்தியாவின் அசாம், ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களில் திறன் பயிற்சி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெரிய அளவில் திறன் பயிற்சியை சிங்கப்பூர் மேற்கொண்டு வந்துள்ளது என்றும் அதனால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் திரு தாஸ் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களும் சிங்கப்பூரின் வருகையை எதிர்பார்ப்பதாகவும் அந்த மாநிலங்களின் மக்களுக்குப் பயிற்சி அளித்து, திறன் வளர்ச்சிக்கு உதவி, வேலைவாய்ப்பை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் தருண் தாசுக்கு கௌரவ குடிமகன் விருதை புதுடெல்லியில் நடந்த விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கினார்.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் தருண் தாசுக்கு கௌரவ குடிமகன் விருதை புதுடெல்லியில் நடந்த விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்திய நிறுவனங்கள் ஆசியானின் மற்ற நாடுகளில் செயல்படுவதற்கும் சிங்கப்பூர் நுழைவாயிலாக விளங்குவதாகத் திரு தாஸ் தெரிவித்தார்.

இருநாட்டு உறவுகளுக்கு நீண்டகாலத் தளங்களை உருவாக்கியுள்ள அவர், இந்தியாவிற்குச் சிங்கப்பூருடனான நல்லுறவு தொடர்ந்து தேவை என்று கூறினார்.

இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களுக்காக வர்த்தகத் தலைவர்கள், கொள்கையாளர்கள், கல்வியாளர்களை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கும் இந்தியா-சிங்கப்பூர் உத்திபூர்வ கலந்துரையாடல் (ஐஎஸ்எஸ்டி) எனும் முக்கியத் தளத்தைத் திரு தாஸ் அமைத்துள்ளார்.

வணிகம், பொருளாதாரத்தைக் கடந்து இரு நாட்டு மக்களுக்கும் இடையில் வலுவான பிணைப்பை ஊக்குவித்து உறவுகளை விரிவாக்கம் செய்த பெருமையும் திரு தாசுக்கு உண்டு. சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவ அறக்கட்டளையின் (எஸ்ஐபிஎஃப்) இயக்குநராக இளையர், கல்வித்துறை பரிமாற்றங்களையும் தனியார் துறை இணக்கங்களையும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் திரு தாஸ் வழிநடத்தினார்.

சிங்கப்பூர்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் திரு தருண் தாஸ் மேற்கொண்ட அயராத முயற்சிக்கும் பங்களிப்புக்கும் 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர்ப் பொதுச் சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்