மலேசியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் தனித்தனியே இருதரப்புச் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் தலைநகர் வியந்தியன் சென்றுள்ள பிரதமர், மாநாடுகளுக்கு இடையே அக்டோபர் 9ஆம் தேதி தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உறவுகளை மறுஉறுதிப்படுத்தினார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் நடந்த 40 நிமிடச் சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கு உகந்த சூழல் இருப்பதை உறுதிசெய்ய இரு தலைவர்களும் கடப்பாடு தெரிவித்தனர். அதன்பின்னர் அமைச்சர்கள், பேராளர்களுடன் இருதரப்புச் சந்திப்பு இடம்பெற்றது.
இருநாடுகளும் ஒன்றிணைந்து சாதிக்கக்கூடியவை ஏராளம் என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், சந்திப்பின்போது பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகக் கூறினார்.
ஏற்கெனவே நீடித்துவரும் நீண்டகால விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் கூறினார்.
அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்கும் மலேசியாவிற்குச் சிங்கப்பூர் முழு ஆதரவை வழங்கும் என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.
இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்புகளை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக இரு பிரதமர்களும் தெரிவித்தனர்.
முன்னதாக, வியட்னாம் பிரதமர் பாம் மின் சின்னைச் சந்தித்துப் பேசிய பிரதமர் வோங், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவமாக மேம்பாடுகாண இருப்பதைச் சுட்டினார். ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லை அது பிரதிபலிக்கும் என்றார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்துப் பிரதமர் பேடொங்டார்ன் ஷினவாத்தை முதன்முறையாக நேரடியாகச் சந்தித்த பிரதமர் வோங், மின்னிலக்கப் பொருளியல், நிதித்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகக் கூறினார்.