கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் இயங்கிவரும் உலகத் திறன்கள் மையத்தில் விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவைகள் அமைப்பு இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
சேவைத்துறை, மின்னிலக்க உயிரோவியம், சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு, விமானவெளி தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, மின்னியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என வெவ்வேறு துறைகளில் புதிய பயிற்சிகளை வழங்குவதற்கான விரிவாக்கத் திட்டத்தை நோக்கமாகக் கொண்டது ஒரு ஒப்பந்தம்.
பகுதி மின்கடத்தித் துறைசார் பயிற்சிகளை உருவாக்குவது மற்றொரு ஒப்பந்தத்தின் நோக்கம்.
இவற்றுடன் மேலும் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒடிசாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட், ஒடிசாவின் முதலமைச்சர் மோகன் சரண் மஹ்ஜி ஆகியோர் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டன.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் விதமாக இந்தியாவிற்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன், தலைநகர் புதுடெல்லியில் ஜனவரி 14 முதல் 16ஆம் தேதி வரை சந்திப்புகளை முடித்துவிட்டு 17ஆம் தேதி காலை புவனேஷ்வருக்குச் சென்றார்.
அவருடன் போக்குவரத்து அமைச்சர் சீ, மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிம் பியாவ் சுவான், ஜோன் பெரேரா, டாக்டர் வான் ரிஸால் ஆகியோரும் இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்.
முதலமைச்சர் மஹ்ஜியுடன் சந்திப்புகளை நடத்திய பின்னர் உலகத் திறன் மையத்திற்கு அதிபர் சென்றார். அங்கு ஒடிசா அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தின் திட்டங்கள், பொருளியல் உத்திகள், வாய்ப்புகள் குறித்து அதிபருக்கும் பேராளர்களுக்கும் விளக்கமளித்தனர்.
அந்த வளாகத்தை பார்வையிடுவதற்கு முன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வில் திரு தர்மன் கலந்துகொண்டார். ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதரவில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழக கல்விச் சேவைகள் அமைப்பு இந்த உலகத் திறன்கள் மையத்தை 2021ஆம் ஆண்டு ஒடிசாவில் நிறுவியது.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டுக்கு 4,000 பேர் பயிற்சிப் பெறக்கூடிய நவீன வளாகத்தில் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற பின் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலையிடத்திற்குத் தேவையான திறன்களை இளையர்கள் கொண்டிருப்பதற்கு ஏதுவாக ஒடிசா அரசாங்கத்தின் ஆதரவில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மையத்தில் பயிலும் கிட்டத்தட்ட 20 மாணவர்களுடன் கலந்துரையாடலில் அதிபர் ஈடுபட்டார். அதை உலகத் திறன் மையத்தின் தலைமை ஆசிரியர் திரு தம்பிராஜா வழிநடத்தினார்.
மாணவர்களும் பயிற்றுவிப்பாளர்களும் தங்களின் அனுபவங்களைப் பகிர, அதிபர் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார். அவர்களில் சிலர் சிங்கப்பூரில் தங்கள் வேலையிடப் பயிற்சிக்கு வந்துள்ளதைச் சுட்டினர்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க எரிசக்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் முடுக்கிவிடும் நோக்கில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும், கிரிட்கோ லிமிடெட் நிறுவனத்துக்கும் புவனேஷ்வரின் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகத்துக்கும் (ஐஐடி புவனேஷ்வர்) இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
உள்ளூர் நிறுவனமான செம்ப்கார்ப்பின் இரு கிளை நிறுவனங்கள் தனித்தனி ஒப்பந்தகளைக் கண்டன.
மற்றொரு உள்ளூர் நிறுவனமான சர்பானா ஜூரோங் மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கு ஒடிசா மாநிலத்துக்கு ஆலோசனை வழங்க இரு அரசாங்க அமைப்புகளுடன் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமான உறவு வலுவாக இருப்பினும் அது தற்போது புதிய பாதையில் இருப்பதாகவும் வெவ்வேறு புது வழிகளிலும் துறைகளிலும் இணக்கம் காணப்படுவது குறித்து இருதரப்பும் ஆய்வு செய்து வருவதாக அதிபர் தர்மன் தமது பயணத்தின்போது கூறியிருந்தார்.
அதன் பிரதிபலிப்பாக அவர் சுட்டிய சில புதுத் துறைகளில் இணக்கங்கள் ஒடிசாவில் காணப்பட்டன.
இந்திய மக்கள் 2047ஆம் ஆண்டுக்குள் காப்புறுதி பெற்றிருக்கவேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கைச் சாத்தியமாக்கும் வகையில் காப்புறுதி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டது.
அதன் விளைவாக, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த நிலைத்தன்மைமிக்க காப்புறுதி தொழில்நுட்பத் தளம் அமையும். ஒடிசாவை உலகளாவிய திறன் மையமாகவும் மற்ற நிதித் தொழில்நுட்பத் துறைகளும் எதிர்காலத்தில் இணைக்கும் பரந்த சிந்தனையுடன் இந்த ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அமைத்துள்ள உலகளாவிய நிதி, தொழில்நுட்பக் கட்டமைப்பு எனும் லாபநோக்கற்ற அமைப்பும் ஒடிசா அரசாங்கத்தின் மின்னியல், தகவல் தொழில்நுட்பத் துறையும் இந்த இணக்கத்தைக் கண்டன.
திறன் மேம்பாடு, கொள்கை வரையறுத்தல், புத்தாக்க அமைப்புமுறை மேம்படுத்துதல், நீடித்த நிலைத்தன்மை தளத்தை உருவாக்குதல் போன்றவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
மேலும் காப்புறுதியையும் ஓய்வூதியத்தையும் மையமாகக்கொண்டு தொழில்நுட்பம், பொருளியல், நீடித்த நிலைத்தன்மை போன்ற அம்சங்களைப் பற்றி கலந்துரையாட உலகத் தலைவர்களை வருடாந்திர உலகளாவிய கருத்தரங்கு மூலம் ஒன்றுசேர்க்கவும் இந்த ஒப்பந்தம் நோக்கம் கொண்டுள்ளது.
அதிபர் தர்மன் ஒடிசாவில் அமைந்துள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் மருந்துத் தயாரிப்பு ஆலைக்குச் செல்வார். ஒடிசா ஆளுநர் அதிபருக்கு வெள்ளிக்கிழமை இரவு கலா பூமி ஒடிசா கலைகள் அரும்பொருளகத்தில் விருந்தளிக்கிறார். தமது அரசுமுறைப் பயணத்தை ஜனவரி 18ஆம் தேதி அதிபர் நிறைவுசெய்வார்.