சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 22) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 1,016 பேரில் 967 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.
இங்கு கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 10,141 ஆகியுள்ளது.
84 வயதான சிங்கப்பூர் மாது கிருமித்தொற்றால் உயிரிழந்த 12வது நபர். அவர் நேற்றிரவு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
அவருக்கு இம்மாதம் 2ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கூ டெக் புவாட் மருத்துவமனை அவரது குடும்பத்தாருக்கு உதவி வருகிறது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
விடுதிகளில் தங்கியிருக்காத, ஆனால் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 32 பேர் இன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய யாருக்கும் கிருமித்தொற்று இன்று உறுதி செய்யப்படவில்லை.
இன்று எட்டு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டன.
பொங்கோலில் இருக்கும் எஸ்11 ஊழியர் தங்கும் விடுதி, 2,211 சம்பவங்களுடன் சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சராசரி தினசரி எண்ணிக்கை 25ஆகக் கடந்த வாரத்தில் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த சராசரி 36ஆக இருந்தது.
சமூகத்தில், தொடர்பு கண்டறியப்படாத கிருமித்தொற்று சம்பவங்களும் குறைந்தன. கடந்த வாரத்தில் அந்த சராசரி தினசரி எண்ணிக்கை 17ஆகக் குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அது 21ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதிகளுக்கு வெளியே தங்கியிருக்கும் வேலை அனுமதிச்சீட்டு கொண்டோரிடையேயும் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 896 பேர் கிருமித்தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 4,234 பேரில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்று உள்ள, ஆனால், சீரான உடல் நலத்துடன் இருக்கும் 4,999 பேர் சமூக தனிமைப்படுத்தல் வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


