'தெற்காசியாவில் பொருளியல் வீழ்ச்சி; சீனாவில் மட்டும் வளர்ச்சி'

கொவிட்-19 நோய்ப் பரவல் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளைப் பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்து இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக ‘வளரும் ஆசியா’, வட்டார அளவில் சரிவு கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டில் ‘வளரும் ஆசியா’வின் பொருளியல் 0.7% சுருங்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

மொத்தம் 45 நாடுகள் இருக்கும் ஆசிய வட்டாரத்தில், கிட்டத்தட்ட நான்கில் மூன்று நாடுகளின் பொருளியல் இவ்வாண்டில் சரிவடையும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, இவ்வாண்டில் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1% வளர்ச்சி அடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டு இருந்தது.

“ஆசிய, பசிபிக் வட்டாரங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் இவ்வாண்டின் எஞ்சிய காலத்திலும் கடினமான வளர்ச்சிப் பாதையையே எதிர்நோக்கலாம்,” என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமைப் பொருளியலாளர் யசுயுகி சவாடா தெரிவித்துள்ளார்.

ஆசிய வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி குறித்த அனைத்துலகப் பண நிதியத்தின் கணிப்பும் இதையொத்தே இருக்கிறது.

தெற்காசியாவே ஆக மோசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, சீனாவில் மட்டும் பொருளியல் வளர்ச்சி அடையும் என நம்பப்படுகிறது.

இவ்வாண்டில் இந்தியப் பொருளியல் 9% சுருங்கும் என்றும் சீனப் பொருளியல் 1.8% வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்காசியாவின் பொருளியல் 3.8% வீழ்ச்சி அடையலாம் என ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலாவை அதிகம் சார்ந்திருக்கும் தீவு நாடுகள் பெரிய அளவிலான பொருளியல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.

ஃபிஜி நாட்டின் பொருளியல் 19.5 விழுக்காடும் மாலத்தீவின் பொருளியல் 20.5 விழுக்காடும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பொருளியல் வீழ்ச்சியில் இருந்து ஆசியா அடுத்த ஆண்டில் வலுவாக மீண்டெழுந்து, 6.8% வளர்ச்சி காணும் என்றும் அவ்வங்கி தெரிவித்து இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் சீனா 7.7 விழுக்காடும் இந்தியா 8 விழுக்காடும் பொருளியல் வளர்ச்சி காணும் என அது கூறியிருக்கிறது.

அதே நேரத்தில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஆசிய வட்டாரத்தின் பொருளியல் மீட்சியைத் தடம் புரளச் செய்துவிடும் என்றும் அவ்வங்கி எச்சரித்து இருக்கிறது.

“கொரோனா பரவலால் பொருளியலுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. முதல் அலையே கட்டுப்படுத்த முடியாமல் தொடர்வதும் அல்லது மீண்டும் மீண்டும் அது தலையெடுப்பதும் கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துவிடும்,” என்று திரு சவாடா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!