துணைப் பிரதமர் ஹெங்: உலக வளர்ச்சிக்கு சிறப்பாகப் பங்களிக்க முடியும்; ஆசியாவிற்கு நல்ல எதிர்காலம்

 

உலகப் பொருளியல் கடந்த நூறாண்டுகளில் இல்லாத மந்தநிலையை எதிர்கொண்டு வந்தாலும் உலகளாவிய வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் ஆசியா நல்ல நிலையில் இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளியலாக சீனா இருப்பதையும் கடந்த ஆண்டில் பத்து ஆசியான் நாடுகளின் வளர்ச்சி ஐந்து விழுக்காட்டிற்கு மேல் இருந்ததையும் சுட்டிய திரு ஹெங், ஆசியாவிற்கு வளமான எதிர்காலம் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆசியாவின் பொருளியல் அடிப்படைகள் வலுவானவை என்றும் ஆசிய, உலக நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு பல சீர்திருத்தங்களை ஆசிய நாடுகள் மேற்கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உற்பத்திக்கும் பயன்பாட்டிற்கும் வலுவான அடித்தளத்தை வழங்கக்கூடிய, பெரியளவிலான, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தை பல ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. துடிப்பான தொழில் முனைவர்களின், பல புத்தாக்க நிறுவனங்களின் தாயகமாக ஆசியா விளங்குகிறது,” என்றார் துணைப் பிரதமர்.

கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய உலகில் எல்லா நாடுகளும் தொழில் நிறுவனங்களும் சில சரிக்கட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்ற திரு ஹெங், விநியோகத் தொடர் மீட்சி, மின்னிலக்கமயம், புத்தாக்கம் மற்றும் புதிய வளர்ச்சித் துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படலாம் என்றும் சொன்னார்.

‘எதிர்கால சீனா உலகக் கருத்தரங்கில்’ நேற்று கலந்துகொண்டு முக்கிய உரையாற்றியபோது நிதியமைச்சருமான திரு ஹெங் இவ்வாறு பேசினார். பதினோராவது ஆண்டாக இடம்பெறும் இந்த வருடாந்திரக் கருத்தரங்கு நாளை வரை நடைபெறும். ‘மீள்திறன்மிக்க எதிர்காலம்: சீனாவிலும் ஆசியானிலும் நோய்ப் பரவலுக்குப் பிந்திய உருமாற்றமும் வாய்ப்புகளும்’ என்பது இவ்வாண்டிற்கான கருப்பொருள்.

கொவிட்-19 பிரச்சினையால் இக்கருத்தரங்கு இம்முறை மெய்நிகர் முறையில் நடத்தப்படுகிறது.

இவ்வட்டார வளர்ச்சிக்கும் மீள்திறன்மிக்க எதிர்காலத்தைக் கட்டமைக்கவும் நாடுகள் மூன்று அம்சங்களில் பங்களிக்க முடியும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

முதலாவதாக, பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதுடன் எல்லா நாடுகளும் கதவைத் திறந்து வைத்து, உலகத்துடன் இணைந்திருக்க வேண்டும். அதன்மூலமே உலகமயமாக்கத்தால் அனைவரும் பயனடைய முடியும் என்பது திரு ஹெங்கின் கருத்து.

அந்த வகையில், சிங்கப்பூர் தனது வேலை அனுமதிக் கொள்கைகளை மறுஆய்வு செய்து வருவதாகவும் நியாயமான பரிசீலனையை வலுப்படுத்தி வருவதாகவும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி வருவதாகவும் பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்காக சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வட்டாரத்துடனான, உலகத்துடனான இணைப்புத்திறனை சிங்கப்பூர் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் வர்த்தகங்களுக்கு இடையே சிங்கப்பூர் பங்காளித்துவங்களைக் கட்டமைக்க வேண்டும் என்பதும் திரு ஹெங் குறிப்பிட்ட வேறு இரு அம்சங்கள்.

மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு, உள்ளூரிலும் இவ்வட்டாரத்திலும் புதிய வாய்ப்புகளை அடையாளம் காணுதல், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் எல்லை கடந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.

தங்களது நடவடிக்கைகள் பரந்த சமூகத்திற்குப் பலனளிப்பதை உறுதிசெய்ய, ஊழியர்கள், உள்ளூர்ச் சமூகங்கள் உட்பட பலதரப்பட்ட பங்காளிகளுடன் வர்த்தகங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

“இந்த வழியில், அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைக்கத்தக்க பொருளியல் வளர்ச்சியை நாம் அடையலாம்,” என்றார் அவர்.

கொரோனா தொற்று உலகமயமாக்கலின் அழுத்தங்களையும் கவலைகளையும் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர் தனது கதவுகளைத் திறந்து வைத்து, ஆசியாவுடனும் உலகத்துடனும் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

“சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்வதில், நமது அணுகுமுறைகளை வெளிப்படுத்துவதில், ஒருவருடன் ஒருவர் புதிய பங்காளித்துவங்களை ஏற்படுத்திக்கொள்வதில் நமது திறமை மீது நாம் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போதுதான், ஆசியாவின் வளர்ச்சிக்கு நாம் பங்களிக்கவும் அதனால் நாம் பயன்பெறவும் முடியும்,” என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon