விமானப் பயணிகளின் கொவிட்-19 சோதனை முடிவுகளை விரைவில் அறிந்துகொள்ள ஏதுவாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய செயலி ஒன்றை சோதனை ஓட்டத்தில் விட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு என தனியாக எந்தவிதச் சான்றிதழும் இன்றி கடப்பிதழ் மூலம் ஒரு க்யூஆர் குறியீடு வழியாகக் கண்டறிய இந்தச் செயலி வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் இந்த கியூஆர் குறியீட்டை வருடுவதன் மூலம் அந்தப் பயணி தடுப்பூசி போட்டுள்ளாரா இல்லையா என்பதையும் அவர்களின் கொவிட்-19 சோதனை முடிவுகளையும் அறிந்துகொள்ள முடியும்.
இதன்மூலம் பயணிகள் சோதனைக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரம் குறையும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
உலகம் முழுதும் விமானப் பயணிகளுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் குறித்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில், சிங்கப்பூரில் வந்திறங்கும் பயணிகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையிலும் கொவிட்-19 சோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலும் புதிய செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையேயான எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து தொழில்துறை சார்ந்த தரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் புதிய சேவை குறித்து அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் செயலியை தெமாசெக்கின் தொழில்நுட்ப நிறுவனமான அஃப்பினிடி தயாரித்துள்ளது.
தற்போதுள்ள விதிமுறைப்படி சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், பயணத்திற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பாக கொவிட்-19 சோதனை செய்துகொண்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கவில்லை என்றால் மட்டுமே அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சோதனைக் கூடத்தில் இருந்து அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். பயணிகள் கொவிட்-19 சோதனை செய்துகொண்டதற்கான சரியான சான்றிதழை வைத்திருக்கின்றனரா என்பது குறித்து குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் சரிபார்க்கப்படுகிறது.
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை முதன்முதலாக கோலாலம்பூர், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஜகார்த்தா, கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள், அந்தந்த நகரங்களில் குறிப்பிட்ட மருந்தகங்களில் கொவிட்-19 சோதனை செய்துகொள்வதன் மூலம் இப்போதுள்ள புதிய சேவைகளைப் பெறமுடியும்.
அந்த மருந்தகங்களின் சோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கான அந்த முடிவுகள் மின்னியல் வழியாகவோ அல்லது சான்றிதழ் மூலமாகவோ வழங்கப்படும்.
அந்தச் சான்றிதழ்கள் க்யூஆர் குறியீடுகளைக் கொண்டிருக்கும். அந்த க்யூஆர் குறியீடுகளை சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள், திறன்பேசி செயலி மூலம் வருடி கொவிட்-19 சோதனை முடிவுகள் பற்றிய தரவுகளை உடனடியாகப் பெறுவார்கள்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய சேவை வெற்றிகரமாக செயல்பட்டால் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.


