இங்கிலாந்தில் பரவும் புதிய வடிவ கொரோனா கிருமியால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் பரவும் புதிய வடிவ கொரோனா கிருமியால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிப்பு

1 mins read
0a971af7-3884-42e4-9623-b63ad4e32429
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இங்கிலாந்தில் புதிதாகப் பரவிவரும் புதிய வடிவ B117 கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (டிசம்பர் 23) தெரிவித்தது.

இங்கிலாந்தில் பயின்று வந்த 17 வயது மாணவி அவர்.

ஐரோப்பாவிலிருந்து அண்மையில் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் கொரோனா கிருமி எந்த வகையைச் சேர்ந்தது என தேசிய பொதுச் சுகாதார ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படுகிறதென சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் இம்மாதம் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 31 பேர்.

12 பேருக்கு B117 வகை கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் ஒருவருக்கு மட்டும் அந்தக் கிருமி தொற்றியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

வேறு ஐவருக்கு கிருமித்தொற்று சுமை குறைவாக இருந்ததால் அவர்களது கிருமித்தொற்று வகையைக் கண்டறிய முடியவில்லை.

வேறு 11 பேருக்கு தொற்றிய கிருமி B117 வகை என முதற்கட்ட பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளன. இன்னும் இருவரது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படவில்லை.

தற்போது உள்ளூர் சமூகத்தில் B117 வகை கொரோனா பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தும் வளாகங்களில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டனர் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்