சிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை; வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசோதனைச் செலவை நிறுவனங்கள் ஏற்கும்

கொரோனா கிருமியின் மாற்று உருக்கள் பரவுவதை அடுத்து அனைத்துலக அளவில் கிருமித்தொற்று மோசமடைந்து வருவதால் சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் உட்பட சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து பயணிகளும் இங்கு வந்ததும் கொவிட்-19 பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் எனப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இம்மாதம் 24ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து இது நடப்புக்கு வரும் என சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.

தனிமைப்படுத்தல் அறிவிப்பு தேவைகள், அதன் முடிவிலான பிசிஅர் பரிசோதனைகள் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

சிங்கப்பூருக்கு குறுகிய கால அனுமதியில் வருவோரும், இங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைக்காக பயணக் காப்புறுதி வைத்திருப்பது அவசியம்.

‘ஏர் டிராவல் பாஸ்’ மற்றும் இருவழி பச்சைத் தட ஏற்பாடுகள் போன்றவற்றின் கீழ் சிங்கப்பூருக்குள் வருவோரும் குறைந்தபட்சம் $30,000 வரையிலான கொவிட்-19 சிகிச்சை தொடர்பான செலவுகளுக்கான காப்புறுதியை வைத்திருக்க வேண்டும். இது இம்மாதம் 31ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும்.

குறுகிய கால அனுமதியில் சிங்கப்பூருக்கு வருவோர், இங்கு கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற நேர்ந்தால் அதற்கான முழு மருத்துவ செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆகியோர் கூடுதலாக 7 நாட்களுக்கு தங்களது குடியிருப்பிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்கி இருப்பது நடப்பில் உள்ளது.

இந்த கூடுதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாளை இரவு 11.59 முதல் நடப்புக்கு வருகிறது.

தனிமைப்படுத்தல் வளாகங்களில் 14 நாட்கள் தங்கிய பிறகும் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகும் என இரு முறை அவர்களுக்கு  கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட, அதிவேகமாகப் பரவும் உருமாறிய  கொரோனா வைரஸ், வரும் மார்ச் மாதத்துக்குள் தொற்று பரவலுக்கான வலுவான மூலமாக அமைந்துவிடக்கூடும் என அமெரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிக கொவிட்-19 அபாயமுள்ள நாடுகள் அல்லது வட்டாரங்களிலிருந்து சிங்கப்பூருக்கு புதிதாக வரும் கட்டுமானத் துறை, கடற்துறையைச் சேர்ந்த எஸ் பாஸ் மற்றும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஊழியர்களும் இங்கு வந்த உடன் பிசிஆர் மற்றும் சீராலஜி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இது நாளை முதல் நடப்புக்கு வரும் என அமைச்சர்கள் நிலை பணிக்குழு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு வந்தவுடன் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கிருமித்தொற்றை முன்னதாகவே கண்டுபிடிக்க முடிவதுடன், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பையும் விரைவில் வழங்க முடியும். அதன் மூலம் சமூகத்துக்குள் பரவும் அபாயத்தைத் தடுக்க முடியும் என்றது பணிக்குழு.

சீராலஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதன் மூலம், கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட, நோய் எதிர்ப்புத் திறன் உடையவர்களை அடையாளம் காண முடியும்.

கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட ஊழியர்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு, கூடுதல் 7 நாள் பரிசோதனை, அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனை போன்ற நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வேலையில் இடையூறு, வீட்டில் தங்கியிருப்பதற்கான செலவு மற்றும் பரிசோதனைக்கான செலவு போன்றவற்றை மேற்கொள்வதற்கான செலவுளைக் குறைக்க இது உதவும்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் செய்யப்படும் பரிசோதனைக்கான செலவை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon