இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை

2 mins read
76691d96-89db-40cf-bd77-a04da370f324
திரு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளார் பேரறிவாளன். படம்: இணையம் -

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 18) காலை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திரு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளார் பேரறிவாளன்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அது தவறு என்று தெரிவித்துள்ளது.

தம்மை ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் பேரறிவாளன்.

அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு தரப்பிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மேலும், பேரறிவாளன் தரப்பு வாதத்தை செவிமடுத்த நீதிபதிகள், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பது மட்டுமே சரியான தீர்வாக அமையும் என்றும், வழக்கு விசாரணையின் மத்தியில் கருத்து தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு இந்த வழக்கில் நேரத்தை வீணடிப்பதாகவும், மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு ஏன் வாதிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

ஆகக் கடைசியாக, கைதிகள் அளிக்கும் கருணை மனு தொடர்பில் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் அல்லவா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

பேரறிவாளன் மனு மீதான விசாரணை கடந்த 11ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.