கோலாலம்பூர்: அடுத்த பத்தாண்டுகளில் மலேசியர்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, மூப்படையும் மக்கள்தொகைக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது என்று மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் கூறியுள்ளார்.
2035ஆம் ஆண்டுக்குள் மலேசிய மக்கள்தொகையில் 10.4 விழுக்காட்டினர் 65 வயதை எட்டியிருப்பர் என்று புள்ளிவிவரத் துறை தற்போது கணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில், ஒரு பெண்ணுக்கு 1.67 குழந்தைகள் என்ற மொத்த கருவள விகிதமும் 1.6 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
“குறைந்துவரும் கருவள விகிதத்தாலும் ஆயுட்கால அதிகரிப்பாலும் இந்தப் போக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மூப்படைதல் குறித்த தேசிய அளவிலான வெள்ளை அறிக்கை 2027ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து 2025-2045ஆம் ஆண்டுக்கான தேசிய மூப்படைதல் செயல்திட்டம் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
பெருநிலைப் பொருளியல், நிதிக் கொள்கை, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு, வாழ்நாள் சுகாதாரப் பராமரிப்பு, நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்டகால முதியோர் பராமரிப்புக் கட்டமைப்பாக அந்த வரைவுத் திட்டம் செயல்படும் என்று திரு அக்மல் கூறினார்.
“சமூக அடிப்படையிலான பராமரிப்பு மாதிரிகளை உருவாக்குதல், பராமரிப்புப் பொருளியல், தொழில்முறைப் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், நலிவடைந்த குழுக்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீண்டகாலப் பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
“அனைத்து மலேசியர்களும் நல்ல உடல்நலத்துடன் முதுமையடைவதையும், சுறுசுறுப்பாகவும் ஆக்கபூர்வமாகவும் இருப்பதையும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதையும் உறுதிசெய்வதே குறிக்கோள்,” என்று திரு அக்மல் கூறினார்.


