மணிலா: பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ் (பிஏஎல்) அந்நாட்டுத் தலைநகரான மணிலாவுக்கு வந்து செல்லவேண்டிய அதன் பல பயணச் சேவைகளை நவம்பர் 14 முதல் 18ஆம் தேதி வரையில் ரத்து அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றியுள்ளது.
அங்கு நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையில் ஆசியான் கூட்டமைப்பின் 49ஆவது மாநாடும் அது சார்ந்த இதர முக்கியச் சந்திப்புக் கூட்டங்களும் நடைபெறவுள்ளன.
அதில் பங்கேற்கும் தென்கிழக்காசிய நாடுகள் உட்பட உலகின் முக்கியத் தலைவர்களும் பேராளர்களும் தலைநகருக்கு வந்து செல்லவேண்டியுள்ளது.
பயண ரத்து, நேர மாற்றங்கள் குறித்து பிஏஎல் விமானச் சேவை ஓர் அறிக்கையை சனிக்கிழமை (அக்டோபர் 31) அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்டது. அதில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அவ்விமானச் சேவை குறிப்பிட்டது.
இணையம் வழியாக இலவசமாக வழங்கப்படும் மறுபதிவு, முழுக் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது எதிர்காலப் பயணநிதியில் அவர்கள் செலுத்திய கட்டணத்தை மாற்றிக்கொள்ளுதல் போன்ற சேவைகளுக்குத் தயாராகும்படியும் பிஏஎல் பாதிக்கப்பட்டோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
