டாக்கா: பங்ளாதேஷ் முதல் தொகுதி மாம்பழங்களைச் சீனாவுக்கு வியாழக்கிழமை (மே 29) அனுப்பியுள்ளது.
முன்னாள் நட்பு நாடும் அண்டை நாடுமான இந்தியாவுடனான உறவு கசந்துள்ள வேளையில் பங்ளாதேஷுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவு மலர்ந்துள்ளது.
“இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பங்ளாதேஷின் முதல் தொகுதி உயர் ரக மாம்பழங்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டன,” என்றார் பங்ளாதேஷுக்கான சீனத் தூதர் யாவ் வென்.
பங்ளாதேஷின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், முதல் அரசாங்கப் பயணமாகச் சீனா சென்றார். அதோடு பாகிஸ்தானுடனும் பங்ளாதேஷ் நெருக்கமாகியுள்ளது.
பங்ளாதேஷ் அமைச்சர்களுடன் விமான நிலையத்தில் மாம்பழங்களைத் திரு யாவ் அனுப்பினார். அப்போது, “சீனா திறந்திருக்கும் வாசல் மூடாது, அது இன்னும் விசாலமாகத் திறக்கப்படும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் பலமுறை வலியுறுத்தியுள்ளார்,” என்று திரு யாவ் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு அனுப்பப்படும் பங்ளாதேஷ் மாம்பழங்கள் ஒரு தொடக்கம்தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
மாம்பழங்களின் ஏற்றுமதிகள் குறைவாகத்தான் உள்ளன. தொடக்கக் கட்டமாக 50 டன் மாம்பழங்கள் அனுப்பப்பட்டன. அந்த எண்ணிக்கை கூடும் என்று பங்ளாதேஷும் சீனாவும் நம்பிக்கை கொண்டுள்ளன.